சனி, 29 ஏப்ரல், 2023

அமைச்சர் செந்தில்பாலாஜி: தானியங்கி மது விற்பனை

 tamil.samayam.com  :  தானியங்கி மது விற்பனை குறித்து பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட அந்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டப்பேரவை கூட்டத்தில் உறுதி அளித்தார்.
இது தமிழக பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில், ‘‘சென்னை, கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை மையத்தை தொடங்கிய டாஸ்மாக் நிர்வாகம்.
இயந்திரத்தில் பணம் செலுத்தி மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு,
ஏடிஎம் இயந்திரம் போல் மது மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும் மையம்’’ என பிரபல ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து திமுக அரசை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.



மதுக்கடைகளை மூடப்போவதாக சொல்லிவிட்டு இப்படி நூதன முறையில் திறக்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் விமர்சனம் செய்தனர். அதேபோல் இத்தகைய நடைமுறையினால், 21 வயதிற்கும் குறைவானவர்களும் மதுவை வாங்கி கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் நெட்டிசன்கள் விவாதம் நடத்தினர்.

இந்தநிலையில் பொய் செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Mall Shops) செயல்பட்டு வருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கையில் உள்ளது.

இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் விற்பனைகளும் மேற்பார்வையாளர்கள் மூலம் செய்யப்படும் அனைத்து மற்றும் கடைப் பணியாளர்களாகிய விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் கடைப்பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை Mall Shops திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இவ்வியந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொது மக்களால் அணுக முடியாது. இது குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக