திங்கள், 17 ஏப்ரல், 2023

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம் ! ஆளுநரை கண்டித்து நாங்களும் தீர்மானம் நிறைவேற்றுவோம் -

  Kalaignar Seithigal - Praveen : ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி, தமிழ்நாடு வழியில் ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்வேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்
இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறித்தும் நாட்டின் புகழ்பெற்ற அரசியலமைப்பின் ஒவ்வொரு கோட்பாடும் சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறித்தும் டெல்லி மாநில முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம்.
டெல்லி மாநில முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நமது நாட்டின் நலன் கருதி மிக முக்கிய விவகாரம் குறித்து தனக்கு எழுதிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவில் ஜனநாயகம் ஒவ்வொரு நாளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே என்றும்,



 நமது புகழ்பெற்ற அரசியலமைப்பின் ஒவ்வொரு கோட்பாடும் முக்கியமாக, சுதந்திரம், சமத்துவம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம் என அனைத்தும் சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்றும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களையும் உள்ளடக்கிய நமது கூட்டாட்சி அமைப்பானது அனைத்து அதிகாரங்களையும் சட்டத்துக்குப் புறம்பாக மையப்படுத்த முயலும் சக்திகளால் பெரும் ஆபத்தில் உள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காலனி ஆட்சியில் இருந்து நாம் சுதந்திரம் அடைந்தபோது, பிரிதல் குறித்த விஷயங்கள் எழுந்த போதிலும், நமது கூட்டாட்சி அரசியல் மற்றும் இந்திய அரசியல் அமைப்பில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக ஓர் ஒன்றிணைந்த தேசமாகவும் ஒருங்கிணைந்த சமூகமாகவும் உருவாகியுள்ளோம். எனினும், இந்தக் கோட்பாடுகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அவர்கள், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள்/துணைநிலை ஆளுநர்கள் அம்மாநிலச் சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களை அல்லது டெல்லி அரசால் அனுப்பப்படும் கோப்புகளை எவ்வித ஒப்புதலும் அளிக்காமல் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமல்ல, ஐனநாயகத்தின் உச்சமான மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என்றும் தனது கடிதத்தில் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத்தின் ஜனநாயக நடைமுறையில் துணைநிலை ஆளுநர் தொடர்ச்சியாகத் தலையிடுவது, தில்லியின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்வதைத் தடுப்பது, இன்னும் ஒரு படி மேலே சென்று அன்றாட நிருவாகச் செயல்பாட்டை ஸ்தம்பிக்கச் செய்தல் போன்றவற்றால் டெல்லியில் நாங்கள் எதிர்கொள்ளும் நிலைமை மிகவும் மோசமானது என்றும், டெல்லி தேசியத் தலைநகர் ஆட்சிப் பகுதிச் சட்டத்தில், 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தால் டெல்லி மாநில அரசு நிலைகுலைந்துள்ளதாகவும், மருத்துவம், கல்வி, நீர், மின்சாரம், தொழில்கள், நிதி அல்லது உள்கட்டமைப்பு என டெல்லி அரசு பெரும் முன்னேற்றம் அடைய முயலும் அனைத்துத் துறைகளிலும், துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் அதற்குத் தடையாக உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரை கண்டித்து நாங்களும் தீர்மானம் நிறைவேற்றுவோம் -முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம் !

மாநில அரசுகள் மற்றும் அவற்றின் ஆளுநர்கள் / துணைநிலை ஆளுநர்கள் என்னும் இடைமுகம் ஒரு போர்க்களமாக ஆக்கப்பட்டு ஒன்றிய அரசால் சத்தமின்றி ஒரு போர் நிகழ்த்தப்பட்டு வரும் சூழ்நிலையில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்கள்/துணைநிலை ஆளுநர்கள் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு, அவற்றின் நிருவாகத்தைத் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப தடுக்கிறார்கள் என்றும்; அவர்கள் ஒன்றிய மற்றும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இடையே அதிகரித்து வரும் பிளவின் அடையாளமாக மாறிவிட்டனர் என்றும், கூட்டாட்சிக் கூட்டுறவு எனும் கோட்பாட்டை மாநில அரசுகள் மிகவும் மதிக்கின்ற போதிலும், அதற்கு (ஒன்றிய அரசால்) சொல்லளவிலேயே மதிப்பளிக்கபடுகிறது என்றும், இதனால் கெடுவாய்ப்பாக, ஆளுநர்/துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் பொறுப்பு பற்றிய கேள்விகளை மக்கள் எழுப்பும் நிலை உருவாகியுள்ளது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு அரசியலமைப்புச் சட்டப் பதவி வகிப்பவரும் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று எண்ணக் கூடாது என்றும், இந்தியா சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படுகிறது என்பதையும், அது ஒன்றிய அரசு மற்றம் அதன் பிரதிநிதிகளின் ஆணையால் நிர்வகிக்கப்படவில்லை என்பதையும் நாம் உறுதியாக முன்னிலைப்படுத்தவேண்டிய தகுந்த நேரம் இதுவாகும் என்றும் தனது கடிதத்தில் மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரை கண்டித்து நாங்களும் தீர்மானம் நிறைவேற்றுவோம் -முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம் !

இத்தகைய அதிகாரத்தை மையப்படுத்தும் போக்குகளுக்கு எதிராக உறுதியான தங்கள் நிலைப்பாட்டை எடுத்தியம்பும் வகையில், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி, ஒன்றிய அரசையும் இந்தியக் குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தைத் தாம் பாராட்டுவதாகவும், அதே வழியில், ஆளுநர்கள் / துணைநிலை ஆளுநர்கள் தங்களின் அரசியல் சாசனப் பணிகளை மேற்கொள்ள காலக்கெடுவை நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இதுபோன்றதொரு தீர்மானத்தை வரும் கூட்டத்தொடரில் டெல்லி சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்வேன் என்றும் மாநில/தேசிய தலைநகரப் பகுதி அரசுகளை சிறுமைப்படுத்த நினைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் கூட்டாக எதிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டு மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி முதல்வரின் இந்த கடிதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அதற்கு "எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டமன்றத்தின் இறையாண்மையே உச்சமானது. எந்த 'நியமிக்கப்பட்ட' ஆளுநரும் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' அரசாங்கங்களின் சட்டமன்ற அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது" என்று கூறியுள்ளார். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக