செவ்வாய், 4 ஏப்ரல், 2023

கேரளா: ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த மனிதர் - விசாரணையை துரிதப்படுத்த பினராயி விஜயன் உத்தரவு

 BBC News தமிழ்  : கேரள மாநிலம் ஆழப்புழாவில் இருந்து கண்ணூருக்குச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், சக பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர் குறித்த உருவப்படத்தை காவல்துறையினர் இன்று வெளியிட்டிருந்தனர்.
அந்த உருவப்படத்தில் இருப்பது போன்ற நபர் கண்ணூர் அரசு மருத்துவமனையில் காணப்பட்டார் என்று தகவல் கிடைத்த நிலையில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் விசாரணையில், சிசிடிவியில் காணப்பட்ட நபர், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் அல்ல எனத் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் ஆழப்புழாவிலிருந்து மதியம் 2.55 மணிக்கு கிளம்பும் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10.55க்கு கண்ணூரை சென்றடைவது வழக்கம். இந்நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி மதியம் வழக்கம்போல பயணிகளுடன் ஆழப்புழாவில் இருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ் ரயில், கோழிக்கோடு அருகே சென்றுகொண்டிருந்தது.


முன்னதாக ரயிலில் ஏறிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சக பயணிகள் மீது பெட்ரோலை தெளிக்க ஆரம்பித்துள்ளார். அவர் என்ன செய்கிறார் என்பதை அவர்கள் உணர்வதற்குள்ளாகவே, அந்த மர்ம நபர் அங்கிருந்த பயணி ஒருவர் மீது தீ வைத்துள்ளார். அவரது செயலை சற்றும் எதிர்பார்த்திராத மற்ற பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடையே நிலவிய பதட்டத்திற்கு மத்தியில், மேலும் சில பயணிகளும் தீயால் காயமடைந்தனர்.

பின்னர் ரயிலின் அவசர சங்கிலி, உடனடியாக இழுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் நடைபெற்றபோது, நேரம் இரவு 9.45 மணியாக இருந்ததாகவும் கோழிக்கோடு மற்றும் கண்ணூருக்கு இடையே உள்ள கோரபுழா பாலத்தை ரயில் அடைய இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பயணிகள் மீது தீ வைத்த அந்த மர்ம நபர், அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாக அங்கிருந்தவர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

இந்தத் தீ வைப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் தற்போது 8 பேர் வரை தீ காயத்தால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 பேர்களின் உடல் எலத்தூர் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏஎன்ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

உயிரை காப்பாற்றிகொள்ள தண்டவாளத்தில் குதித்த பயணிகள்
இந்தச் சம்பவத்தின்போது ரஹ்மத் என்ற பயணி ஒருவர், தனது தங்கை ஜசீலா மற்றும் அவரது ஒரு வயது குழந்தை ஆகியோருடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் திடீரென மர்ம நபர் ஒருவர் பயணிகள் மீது தீ வைத்ததால் அதிர்ச்சியடைந்த ரஹ்மத், தங்களது குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றிக் கொள்ள, தனது தங்கை மற்றும் அவரது ஒரு வயது குழந்தையுடன் ரயிலில் இருந்து குதித்தத்தாகக் கூறப்படுகிறது.

இவர்களது உடல் கோழிக்கோடு அருகே அமைந்திருக்கும் எலத்தூர் ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் இவர்களது உடல்கள் தண்டவாளத்தில் கிடப்பது குறித்த தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
காவல்துறையினர் என்ன சொல்கின்றனர்?

இந்தச் சம்பவம் தொடர்பாக, பாலக்காடு தெற்கு பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"சம்பவம் நடந்த அன்று இரவு 9.25 மணியளவில் காவல்துறையினரின் கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு கிடைத்த தகவலில், 16307 என்ற எண்ணுடைய ரயிலின் D1 பெட்டிக்குள் ஏறிய மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது, ஏதோவொரு வகையான திரவத்தைத் தெளித்துவிட்டு, தீ வைத்துள்ளார்.

அதன்பின் உடனடியாக ரயிலின் அவசர சங்கிலியைப் பிடித்து இழுத்த அந்த மர்ம நபர், உடனடியாக அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தில் அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் காயமடைந்துள்ளனர்,” என்று காவல்துறை சார்பில் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்ததாக ஏ.என்.ஐ கூறியுள்ளது.

இந்த தீ வைப்பு சம்பவத்திற்குப் பிறகு, ஆழப்புழா - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில், 10.10 மணியளவில் மீண்டும் இயங்கத் துவங்கியதாகவும் ஏ.என்.ஐ. செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
கேரளாவையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து, தீ வைத்த அந்த மர்ம நபரின் உருவப்படத்தை வரைந்து காவல்துறையினர் வெளியிட்டனர்.
அந்த உருவப்படத்தில் உள்ள அடையாளத்தின் படி, கண்ணூர் அரசு மருத்துவமனையில் ஒருவர் காணப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

ஞாயிறன்று இரவு, அந்த உருவப்படத்தின் அடையாளம் கொண்ட நபர் ஒருவர், கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் விசாரணையில், அது அந்த மர்ம நபர் அல்ல என்று காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளின் மூலம், அது தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் அல்ல என்பது உறுதியாகியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கேரள மாநில டி.ஜி.பி. அனில் காந்த், “இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

விசாரனையை துரிதப்படுத்திய பினராயி விஜயன்
கேரள ரயிலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இது தொடர்பாக விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

”இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென காவல்துறையினரை அறிவிறுத்தியுள்ளேன்.
இதற்காக சிறப்பு புலனாய்வு குழுவும் நியமிக்கப்படும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

“இதுபோன்ற சம்வங்கள் கேரளத்தில் இதற்கு முன்னதாக நடைபெற்றது இல்லை. தற்போது நடந்திருக்கும் இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நினைத்துப் பார்க்கவே மிகவும் அச்சமாக இருக்கிறது.
துரிதமான முறையில் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயனுக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்,” என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக