செவ்வாய், 11 ஏப்ரல், 2023

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்சி தகுதி இழப்பு! மம்தா பானர்ஜியின் வாக்குவங்கி சரிவு?

 மாலைமலர் : புதுடெல்லி மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அந்தஸ்தும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பாரத் ராஷ்டிர சமிதி, மணிப்பூரில் பிடிஏ கட்சி, புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கடசி, மேற்கு வங்காளத்தில் ஆர்எஸ்பி, மிசோரமில் எம்பிசி ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.


அதேசமயம், டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் மற்றும் செயல்திறனின் அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தற்போது டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் செயல்திறனின் அடிப்படையில், நாகாலாந்தில் தேசியவாத காங்கிரசும், மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசும் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் இப்போது தேசிய கட்சிகளாக உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக