ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் இறந்த சிறுவன் உடலில் 96 காயங்கள்: அதிர வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை


BBC - Tamil  : இந்தியா - செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் இறந்த சிறுவன் உடலில் 96 காயங்கள்: அதிர வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை
செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ இறந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அண்மையில் அவரது உடற்கூராய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில்வே லைனில் பேட்டரியை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட ,
அங்கு நடந்த சித்ரவதையால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என்பதை உடற்கூராய்வு அறிக்கை காட்டுகிறது என்கிறார் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஆசிர்வாதம்.
 அறிக்கையில் என்ன இருக்கிறது?
கோகுல்ஸ்ரீ உடலில் 96 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கை கூறுகிறது.  சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையில் சித்ரவதைக்கு இலக்காகி இறந்த தந்தை மகன், பெனிக்ஸ், ஜெயராஜ் உடற்கூராய்வு அறிக்கையில் அவர்களுக்கு 18 இடங்களில் காயம் இருந்தது தெரியவந்தது.

ஆனால் 17 வயது சிறுவனை இறக்கும் அளவுக்கு தாக்கியதில் ஒரே நாளில் அவரின் உடலில் 96 காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மனித உரிமைப் பணியில் இதுவரை சுமார் 30 காவல் மரணங்களை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் கோகுல்ஸ்ரீக்கு நடந்த சித்ரவதையைப் போல நான் பார்த்தது இல்லை,” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஆசிர்வாதம்.

“என் மகன் கோகுல்ஸ்ரீ கடுமையான சித்ரவதைக்கு உள்ளாகி இருக்கிறான் என்ற விவரம் உடற்கூராய்வு அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.

இந்த அறிக்கையை என்னிடம் தராமல் இருக்க பல மட்டத்தில் அதிகாரிகள் முயற்சி செய்தனர்,” என்று கோகுல்ஸ்ரீயின் தாய் பிரியா பிபிசி தமிழிடம் கூறினார்.

கணவர், மகனை இறந்த பிரியா தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மினரல் வாட்டர் ஆலையில் காவலாளியாக இப்போது பணியாற்றி வருகிறார். மகனின் மரணத்திற்கு நீதிக் கேட்டு போராட யாரும் உதவாத நிலையில், தன்னார்வலர்கள் சிலர் உதவியுடன் தொடர்ந்து போராடி வருகிறார் பிரியா.

“என் மகன் இறந்த பிறகு அவன் உயிருடன் இருக்கிறானா என சோதிக்க கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் அவனின் கண்ணில் குண்டூசி வைத்து குத்தி இருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், கண்ணில் மிளகாய்ப் பொடி தூவியும் அவர்கள் பார்த்து இருக்கின்றனர் என்று உடற்கூராய்வு அறிக்கை கூறுவதாக சொல்கிறார்கள்.

இவ்வளவு மோசமான சித்ரவதைக்கு உள்ளாகி என் மகன் இறந்து இருக்கிறான். ஆனால் அவனது மரணத்திற்கு காரணமான யார் மீதும் எந்த நடவடிக்கையும் இப்போது வரை எடுக்கப்படவில்லை,” என்று கண்ணீருடன் கூறினார் பிரியா.


அதிகாரிகளின் அலட்சியம்

இறந்தவருக்கு உடற்கூராய்வு நடந்தால், அவருக்கு தொடர்புடையவருக்கு அந்த ஆய்வின் அறிக்கை, போட்டோ, வீடியோ வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் கோகுல்ஸ்ரீயின் உடற்கூராய்வு அறிக்கையை கேட்டு மாவட்ட நீதிபதி, விசாரணை அதிகாரி, மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோரை பலமுறை கேட்டும் அந்த அறிக்கை உடனடியாக தரப்படவில்லை.

பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகு, அண்மையில் தான் இந்த உடற்கூராய்வு அறிக்கை கிடைத்தது. இன்னும் உடற்கூராய்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ அவரின் தாயிடம் வழங்கப்படவில்லை, என்று ஆசிர்வாதம் தெரிவித்தார்.

தவறு செய்யும் சிறார்களை கவனித்துக் கொள்ளும் இடத்தில் இருக்கும் அதிகாரிகளே எப்படி இதைச் செய்தார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கோகுல்ஸ்ரீ இறந்த பிறகு அதனை உறுதி செய்ய செவிலியர் உதவியுடன் வாயில் ஹைட்ரஜன் பெராக்சைடு ஊற்றி சோதனை செய்து இருக்கின்றனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். குற்றவாளிகளை விட இந்த குழந்தை மோசமாக கொல்லப்பட்டு இருக்கிறார், என்று அவர் கூறினார்.

கூர்நோக்கு இல்லம்

கோகுல்ஸ்ரீ மரணம் தொடர்பாக மாவட்ட காவல்துறை, சமூகநலத்துறை இயக்குநர், மாநில குழந்தைகள் நல ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணையம் என பல்வேறு அரசு அமைப்புகள் விசாரணை நடத்தி இருக்கின்றன.

ஆனால் இப்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட செங்கல்பட்டு கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவலர்கள் உள்ளிட்ட 7 பேரும் பிணையில் வந்து விட்டனர்.

துறை ரீதியாக நடத்த விசாரணை அறிக்கையை வழங்க சமூக நலத்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தோம். காவல்துறை விசாரணையை சுட்டிக் காட்டி அதை தர மறுத்து விட்டனர், என்றார் ஆசிர்வாதம்.

“3 மாதங்கள் ஆகியும், இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை, இப்படி செய்வதன் மூலம் தவறு செய்த அதிகாரிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுகிறதா” என்ற கேள்வி எனக்கு எழுகிறது என்கிறார், சிறுவனின் தாய் பிரியா.

இதுமட்டுமின்றி முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகை மட்டுமே என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு தருவதாக கூறிய வீட்டுக்கான ஆணை எனக்கு இன்னும் வழங்கப்படவில்லை, என்று அவர் கூறினார்.

சிபிசிஐடி விசாரணை

சிறுவன் கோகுல்ஸ்ரீ மரணம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர்.

வழக்கு புதிதாக ஒரு காவல்துறை அமைப்பிடம் சென்று இருப்பதால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் 6 மாதங்கள் கூட ஆகலாம். அதுவரை பிரியாவுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம், என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஆசிர்வாதம் தெரிவித்தார்.

சிபிசிஐடி அதிகாரிகள் யாரும் விசாரணைக்காக என்னை இப்போது வரை தொடர்பு கொள்ளவில்லை என பிரியா கூறினார்.

தாய் கடத்தப்பட்டதாகப் புகார்

மேலும், “கோகுல்ஸ்ரீ இறந்த பிறகு என்னை மூன்று நாட்களுக்கு கடத்திச் சென்று சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இது தொடர்பாக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்ய செங்கல்பட்டு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளரிடம் 4 முறை மனு அளித்தேன்”, என்றார் பிரியா.

“இது தொடர்பாக என்னிடம் பல முறை காவல்துறை விசாரணை நடத்தியது. என்னை கடத்தி வைத்து இருந்த இடங்களுக்கு கூட்டிச் சென்று விசாரணை நடத்தியது. ஆனால் இப்போது வரை இந்த என்னை கடத்திச் சென்று அடைத்து வைத்தவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று பிரியா கூறினார்.

சமூக நலத்துறையை சேர்ந்த மாவட்ட குழந்தைகள் அதிகாரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வேறு எந்த நடவடிக்கையும் சமூக நலத்துறை இயக்குநர் நடத்திய விசாரணை அடிப்படையில் இதுவரை எடுக்கப்படவில்லை என்று ஆசிர்வாதம் தெரிவித்தார்.

கோகுல்ஸ்ரீ வழக்கு விசாரணை தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகளிடம் பேசிய போது, “வழக்கின் விசாரணையை இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரிடமும் உரிய விசாரணை நடைபெறும். மேற்கொண்டு விவரங்களை வழக்கு விசாரணை நிறைவடையாததால் இப்போது தெரிவிக்க முடியாது,” என தெரிவித்தனர்.

 ‘மாற்றம் தேவை’

குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை காக்க வேண்டியது கூர்நோக்கு இல்லங்களின் கடமை.

ஆனால் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளும், அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பும் கோகுல்ஸ்ரீ போன்ற சிறுவர்களுக்கு எதிராக செயல்படுகின்றன.

இதற்கு நீதித்துறை, காவல்துறை, மருத்துவத்துறை அதிகாரிகளும் ஒத்துழைக்கின்றனர். ஒவ்வொரு முறையும் இதுபோன்ற பிரச்னைகளை பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு வெளியே கொண்டு வரும் நிலை தான் இங்கு உள்ளது, என்று இந்த விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆசிர்வாதம் தெரிவித்தார்.

கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் என்பது சட்டத்தை மீறும் குழந்தைகளை கையாள்வதற்காக அமைக்கப்பட்டவை. அவை சாதாரண பள்ளிகள் போல அல்ல.

அங்கு பணியமர்த்தப்படும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு சிறப்புத் திறன், பயிற்சி, அணுகுமுறை இருப்பது அவசியம்.

இந்த நடைமுறை இல்லாத காரணத்தால், குற்றம் செய்யும் சிறுவர்களை தண்டிக்கும் இடமாகவே கூர்நோக்கு இல்லம் இருக்கிறது, என்று பேராசிரியரும் குழந்தைகள் உரிமைகள் செயல்பாட்டாளருமான ஆண்ட்ரு ஷேசுராஜ் கூறினார்.

குழந்தைகள் நலன் தொடர்பாக புதிய கொள்கைகளை வகுக்க தமிழ்நாடு அரசு அமைப்பதாக கூறிய குழுவுக்கு இன்னும் உறுப்பினர்கள் நியமிக்கபடவில்லை.

ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையிலான அந்தக் குழுவுக்கு விரைவாக உறுப்பினர்கள் நியமனம் செய்து, இது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறுவதை தவிர்க்க உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக