செவ்வாய், 4 ஏப்ரல், 2023

டியாகோ கார்சியாவில் 68 தமிழர்கள் .. புலம்பெயர்தமிழர்களின் உதவியை நாடுகிறார்கள்

 hirunews.lk : புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்க்கும் டியாகோ கார்சியா புகலிடக் கோரிக்கையாளர்கள்!
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தங்கியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள், புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 68 புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கு சென்று 18 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தங்களை அங்கிருந்து மூன்றாம் தரப்பு நாடுகளுக்காவது அனுப்புமாறு கோருகின்றனர்.
குறித்த தீவில் இதுவரை 68 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 9 பெண்களும், 47 ஆண்களும், 17 சிறுவர்களும் அடங்குகின்றனர்.


அவர்கள் கனடா நோக்கி சென்ற போது அவர்களது படகு சேதமடைந்த நிலையில் பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராணுவ தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியாவில் தஞ்சமடைந்தனர்.

சில வாரங்களில் அவர்களை அங்கிருந்து அனுப்புவதாக தீவின் அதிகாரிகள் அறிவித்திருந்த போதிலும் அவர்களில் 68 பேர் 18 மாதங்களாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பான தகவல்களை முன்னதாக பல சந்தர்ப்பங்களில் எமது செய்தி சேவை வெளிப்படுத்தியிருந்தது.
அங்குள்ள பலர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள முயல்கின்ற சம்பவங்கள் தொடர்பிலும் எமது செய்தி சேவையில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், அங்குள்ள மேலும் 4 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் 15 வயதுடைய சிறுமி ஒருவரும், கடந்த சனிக்கிழமை மூன்று ஆண்களும் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், தங்களது பிள்ளைகள் 18 மாதங்களாக பல சிரமங்களை எதிர்கொள்வதாக அங்குள்ள தாய் ஒருவர் எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.

அதேநேரம், ஏதிலி நிலையின்றி சுதந்திரமாக வாழக்கூடிய நாடொன்றுக்கு தங்களை அனுப்புமாறும் தங்களது விடயத்தில் புலம்பெயர் அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

டியாகோ கார்சியா என்பது பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் 27 சதுர கிலோமீற்றர் பரப்பை கொண்ட பிரதேசமாகும்.
இது மொரிஷியஸ் மற்றும் சீஷெல்ஸில் உள்ள பிரிட்டிஷ் குடியேற்றத்துடன் ஒன்றாக இணைக்கப்பட்ட பகுதியாகும்.
தீவின் பூர்வீக குடிகளாக சாகோசியன் மக்கள் வாழ்ந்தனர்.

எனினும் பிரிட்டிஷ்- அமெரிக்க இராணுவ தளம் அமைப்பதற்காக, 1960 மற்றும் 1970களில் அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக