சனி, 4 மார்ச், 2023

அழகிரி வீட்டில் ஸ்டாலின் லஞ்ச்? மதுரை அறிகுறி!

 minnambalam.com - Aara :  வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கள ஆய்வு நிகழ்ச்சிக்காக மதுரை செல்ல இருக்கும் தகவல்கள் இன்பாக்ஸில் வந்தன.
அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அரசின் திட்டப் பணிகள் செம்மையாக நடைபெறுகின்றனவா என்று கண்காணிக்கவும், அரசு அலுவலகங்கள் மக்கள் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்கின்றனவா என்பதை கண்காணிக்கவும் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற பயணத்தை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கினார்.
முதல் கட்டமாக வேலூரை மையமாகக் கொண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகளிடம் அரசு திட்டங்கள் பற்றி ஆய்வு செய்தார். அடுத்து பிப்ரவரி மத்தியில் சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.



தொடர்ச்சியாக மார்ச் 5, 6 தேதிகளில் மதுரையை மையமாகக் கொண்டு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் அரசு திட்டப் பணிகள் பற்றி ஆய்வு செய்கிறார்.

இதற்காக மார்ச் 5ஆம் தேதி மதுரை வரும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது அண்ணனும் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்பட்டவருமான அழகிரியை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் மீண்டும் ஏற்பட்டுள்ளன.

2014 இல் அப்போதைய திமுக தலைவர் கலைஞரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் மு. க. அழகிரி. அதன் பிறகு இன்று வரை அவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரோடு சேர்ந்து செயல்படலாம் என்ற ஒரு திட்டத்தில் இருந்தார் அழகிரி. ஆனால் கடைசி நேரத்தில் ரஜினியும் ஒதுங்கி விட்டதால் அதன் பிறகு அமைதியாகவே இருந்தார் அழகிரி.

2021 இல் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வரான நிலையில், ’என் தம்பி நல்லாட்சி தருவார்’ என்று ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். திமுக ஆட்சி அமைத்ததற்கு முன்னும் பின்னும் குடும்ப ரீதியாக கோபாலபுரத்து உறவுகளோடு தொடர்பில் இருந்தாலும் அரசியல் ரீதியாக அழகிரி எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நான்கு ஐந்து முறை மதுரைக்கு வந்து சென்றபோதும் அவர் அழகிரியை சந்திக்கவில்லை. அதே நேரம் கடந்த பொங்கலை ஒட்டி மதுரை சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பாவான அழகிரி வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார். அப்போது அழகிரியும் மகிழ்ந்து மகிழ்ந்து பேட்டி அளித்தார்.

மதுரையில் அழகிரி வீட்டுக்கு உதயநிதி சென்ற நிலையில் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை பயணத்தின் போது அழகிரி வீட்டுக்கு செல்வாரா அழகிரியை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை வருவதற்காக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அரசு கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடித்து வருகிறார்கள். இந்த நிலையில் அழகிரி வீடு அமைந்துள்ள சத்திய சாய் நகர், பகுதிக்கு செல்லக்கூடிய ஜெய்ஹிந்த் புரம் மார்க்கெட் ஆகிய பகுதிகளிலும் சாலை டச் அப் பணிகளும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளும் நடந்து வருகிறது. இதன் மூலம் அழகிரி வீட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்வது அவரது பயணத் திட்டத்தில் ஒன்றாக இருக்கலாம் என்ற தகவல் அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்தே கசிகிறது.

இதுகுறித்து அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, ‘மார்ச் 1ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினுடைய பிறந்தநாளை ஒட்டி அழகிரி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அந்த உரையாடலின் போது மார்ச் ஐந்தாம் தேதி மதுரைக்கு வரும்போது தான் மதுரை சர்க்யூட் ஹவுஸ்க்கு வந்து சந்திப்பதாக அழகிரி சொல்லி இருக்கிறார். அதற்கு ஸ்டாலின், ’நீங்கள் சர்க்யூட் ஹவுஸ்க்கு வர வேண்டாம் நானே வீட்டுக்கு வருகிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

இந்த பின்னணியில் மார்ச் ஐந்தாம் தேதி மதிய உணவுக்கு தனது அண்ணன் அழகிரி வீட்டுக்கு செல்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அழகிரி வீடு அமைந்துள்ள சத்திய சாய் நகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலமைச்சர் வருவதால் அழகிரியின் ஆதரவாளர்கள் திரண்டு வரவேண்டாம் எனவும் அழகிரி தரப்பிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து அழகிரி தனது நெருக்கமான நண்பர்களிடம், ‘முதலமைச்சர் வீட்டுக்கு வரும்போது கூட்டம் கூடி விடாதீங்க. அதற்கு அடுத்த நாள் நான் கோர்ட்டுக்கு வருவேன். அங்கே எனது ஆதரவாளர்கள் வரலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மதுரை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் தன் அண்ணன் வீட்டுக்கு செல்வது மார்ச் 4ஆம் தேதி வரையில் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்ட பயணத் திட்டத்தில் இருக்கிறது என்பதுதான் மதுரை வட்டார தகவல்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக