ஞாயிறு, 5 மார்ச், 2023

ரயில் தண்டவாளமருகே கிடந்த பாமக மகளிரணி தலைவியின் சடலம்

The body of pmk womens leader lying by the train tracks!

  நக்கீரன் : ரயில்வே தண்டவாளம் அருகே பா.ம.க. மகளிரணி தலைவியின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள ரெங்கசமுத்திரம் கிராமம் சண்முகத்தாய் என்பவரின் மகள் மாரியம்மாள் (44).
இவர் குருவிகுளம் ஒன்றிய பா.ம.க. மகளிரணி தலைவி பொறுப்பிலிருப்பவர்.
மாரியம்மாள் தனது கணவரைப் பிரிந்து ரெங்கசமுத்திரத்தில் தனியாக வசித்து வந்தாராம்.


கடந்த 2 தினங்களாக மாரியம்மாள் வீடு பூட்டிக் கிடப்பதைப் பார்த்தவர்கள் அவரது தாயாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர
தகவல் தெரிந்ததும் மாரியம்மாளின் தாயார் அவரைப் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லையாம்.
இந்தச் சூழலில் சங்கரன்கோவில் இலவன்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் சடலமாகக் கிடந்தது பா.ம.க. மகளிரணி தலைவி மாரியம்மாள் என்பது தெரிய வந்திருக்கிறது. அவரது உடலில் லேசான காயங்கள் இருப்பதாகவும் மேலும் அவரது உடல் கிடந்த இடத்தில் அவர் ஓட்டி வந்த ஸ்கூட்டரும் நிறுத்தப்பட்டிருக்கிறது. மாரியம்மாள் யாராலோ அழைத்து வரப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே தன் மகள் சாவில் மர்மமிருப்பதாக மாரியம்மாளின் தாயார் சண்முகத்தாய் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர், மாரியம்மாள் இறப்பு அரசியல் பகையா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாரியம்மாள் ஏற்கனவே கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருபவர் என்பதும் இந்த சமயத்தில் அவருக்கும் வேறு ஒரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அவரது கணவரும் மாரியம்மாளும் வேறு வேறு ஊரில் வசித்து வந்த நிலையில், மாரியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்திருக்கிறார். அது சம்பந்தமாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்தச் சூழலில் தான் மாரியம்மாளின் உடல் ரயில்வே தண்டவாளமருகே கிடந்திருக்கிறது. மாரியம்மாளின் உயிரிழப்பிற்கு இதுதான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், மாரியம்மாள் உடன் தொடர்பில் இருந்த நபருடனும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆனாலும் அரசியல் புள்ளியின் இந்த மர்ம மரணம் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக