வெள்ளி, 31 மார்ச், 2023

கலாஷேத்ரா விவகாரம்; மாணவர்களின் கடிதத்தால் வெளிவரும் உண்மைகள்

 nakkheeran.in  :  சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாணவிகள் சார்பில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம் அளித்துள்ளனர்.
1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலாஷேத்ரா நுண்கலை கல்லூரி மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
கலாஷேத்ரா நுண்கலை கல்லூரியில் பணியாற்றும் மூத்த ஆசிரியர் ஒருவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரையடுத்து கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை தமிழக டிஜிபியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தார்.



'ஆசிரியரை பாதுகாக்கும் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என மாணவி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனால் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தேசிய மகளிர் ஆணையம் மாற்றிக் கொண்டது.

ஆனால், ஒருவர் அல்ல. நான்கு பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா நுண்கலை கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி ஒருவர் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ''ஒரு மெயின் சீனியர் ஸ்டாப். அவர் பெயர் ஹரிபத்மன். அவரை இங்கே தங்க வைத்து வீடு எல்லாம் கொடுத்து மரியாதை செலுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு அவருக்கு தகுதியே கிடையாது. அவர் எங்கள் பிள்ளைகளுக்கு வார்த்தைகளால் தொல்லை கொடுக்கிறார். பாலியல் தொல்லை கொடுக்கிறார். பார்க்கின்ற பார்வையே சரியில்லை. இன்னும் 3 பேர் இருக்காங்க. சஞ்சிதலால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணன். சஞ்சிதலால் பசங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மிச்சம் இரண்டு பேர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள்'' என்றார்.

2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த கொடுமைகள் நடைபெற்று வருவதாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை மாணவிகளின் போராட்டம் தொடரும் என மின்னஞ்சல் மூலம் தமிழக முதல்வருக்கும், மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பேராசிரியர்களால் பல ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதாக முன்னாள் மற்றும் இன்னாள் மாணவிகளின் புகார்களை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். 4 பேராசிரியர்களால் பல்வேறு மாணவிகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அக்கடிதத்தில் கூறியுள்ளனர்.

கலாஷேத்ராவின் தற்போதைய இயக்குநரான ரேவதி ராமச்சந்திரன் மற்றும் துணைத்தலைவர் ஜியோல்ஸ்னா மேனன் ஆகியோர் மாணவிகளை உருவகேலி செய்வதும் ஜாதிப்பெயரை சொல்லி அவமானப்படுத்துவதுமான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக மாணவிகள் அக்கடித்ததில் குற்றம் சாட்டியுள்ளனர்.

பேராசிரியர்களின் செயல்பாடுகளைக் குறித்து பலமுறை கல்லூரியின் இயக்குநரான ரேவதி ராமச்சந்திரனிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ள மாணவிகள், இது குறித்து வெளியே சொன்னால் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பேசுவதற்கு அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி இயக்குநரிடம் புகார் அளித்தால் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக புகார் கொடுக்கும் மாணவிகளை மிரட்டுவதாகவும், இருந்தும் அவரிடம் புகார் கடிதம் கொடுத்ததையும் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகார் கடிதங்களுக்கு சான்றளித்து பேராசிரியர்கள் மாணவிகள் எழுதிய கடிதங்களும் உள்ளது. நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மத்திய கலாச்சாரத் துறைக்கு கடிதம் எழுதுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவர் அமைப்புடன் கலந்தாலோசித்து கல்லூரி நிர்வாகத்தின் வெளியில் இருந்து ஒருவரை தலைவராகக் கொண்டு உள் புகார் குழுவை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக