திங்கள், 6 மார்ச், 2023

தனியார் பஸ்களில் பெண்கள்-மாணவர்களுக்கு இலவச சலுகை உண்டு: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

 மாலை மலர்  :  சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
சென்னைக்கு தினமும் வந்து செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பஸ் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்க கன்சல்டன்ட் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
இவை அமைக்கப்பட்ட பிறகு 3 மாதத்தில் ஆய்வு செய்து சாதக, பாதகம் குறித்து அறிக்கை தரும். அதன் பிறகுதான் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் மாநகர பஸ் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.


மாநகர பேருந்துகள் தனியார் மயமில்லை. பதட்டப்பட வேண்டாம். அரசின் வழித்தடத்தில் அதன் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதனால் பள்ளி மாணவர்கள், பெண்கள் இலவச பயண சலுகை பாதிக்காது.

தனியார் பஸ்களிலும் பயணம் செய்யலாம். அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை தான் பின்பற்றுகிறோம். கேரளா, டெல்லி, பெங்களூருவில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

இத்திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். போராட்டத்தை கைவிட வேண்டும். டீசல் விலை கூடினாலும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பாதுகாத்து வருகிறார். கடந்த ஆண்டு 1000 பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கினார். இந்த ஆண்டும் புதிய பஸ் வாங்க நிதி ஒதுக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக