சனி, 18 மார்ச், 2023

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.25 ஆயிரம் கோடியில் கை வைத்த ஒன்றிய அரசு: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி

 tamil.samayam.com  : தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024 வரும் திங்கள் கிழமை (மார்ச் 20) சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று டெல்லியில் முக்கிய சந்திப்புகளை நிகழ்த்தினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய நிதித்துறை செயலாளரை சந்தித்தார்.
தமிழக நிதி நிலைமை சரிவிலிருந்து மீள்கிறதா?
அதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
 “வரும் திங்கட்கிழமை தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழகத்தின் நிதி நிலைமை முன்னர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.


தற்போது அதை படிப்படியாக திருத்தி போன ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையையும், நிதி பற்றாக்குறையையும் குறைத்தோம். இந்த ஆண்டும் அதேபோன்ற செயல்பாடு தொடரும்.

ஒன்றிய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடன் வாங்கும் உச்ச வரம்புக்கும் தற்போதைய புதிய அறிவித்திருக்கும் அறிவிப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.
ஆனால் ஒன்றிய அரசு அறிவித்த கடன் வாங்கும் உச்ச வரம்பு அளவுக்கு தமிழகம் கடன் வாங்க போவதில்லை. தமிழ்நாடு பட்ஜெட்டுக்காக புதிதாக கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நிதிக்குழு காலத்திலும் தமிழ்நாட்டுகான வழங்கப்படும் ஒன்றிய அரசின் நிதி பங்கு குறைந்து கொண்டே போகிறது.

தற்போது ஒன்றிய அரசிடமிருந்து வரும் நிதிப்பங்கு 3 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துள்ளது,
 குறிப்பாக உற்பத்தியிலிருந்து 1 சதவீதம் நிதி ஒன்றிய அரசிடமிருந்து குறைந்துள்ளது.
குறிப்பாக உற்பத்தி மதிப்பிலிருந்து தமிழகத்துக்கு ஒன்றிய அரசிடமிருந்து வரும் பங்கில் சுமார் ரூ.25,000 கோடி ரூபாய் குறைத்துள்ளது.
அதேப்போன்று சர்வதேச அளவில் பொருளாதார சரிவு வந்தால், ஓரளவுக்கு தான் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும், அதேவேளையில் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் அது இந்தியா போன்ற நாடுகளுக்கு வணிக ரீதியிலான வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ஜெயசங்கர் உடனான சந்திப்பு குறித்துப் பேசிய அவர், “கடந்த முறை டெல்லிக்கு வந்த போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தேன். அதில் சிலவற்றில் முன்னேற்றம் உள்ளது. பொருளாதார அளவில் சர்வதேச கவனம் இந்தியா மீது உள்ளது. இந்த சூழலில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளில், ஒன்றிய அரசுக்கு சில பங்குள்ளது. முன்மொழிவுகளுக்கான அனுமதி, போக்குவரத்து அனுமதி உள்ளிட்டவற்றில் ஒன்றிய அரசின் பங்கு உள்ளது. தற்போதும் சில கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன். அதில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக