திங்கள், 20 மார்ச், 2023

ஆம்புலன்சில் புலிகளுக்காக வெடிபொருள்:கடத்திய சதீஸ்குமாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு 15 ஆண்டுகளின் பின் விடுதலை! பேட்டி

Image result for ranil wickramasinghe
President Ranil Wickremasingha
இலங்கை, பிரபாகரன்
பி பி சி தமிழ் : : இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில், யுத்தத்தின் பாதிப்புகள் இன்றும் காணப்படுகின்றன.
அவ்வாறான பாதிப்புகளை எதிர்நோக்கியவர்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் அடங்குவார்கள்.
 புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்றும் பலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள்.  இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு வழங்கியதாகக் கூறப்பட்டு, 15 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் அண்மையில், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார் என்ற தமிழ் அரசியல் கைதியே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் வலுப் பெற ஆரம்பித்த நிலையில், இவர் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் அம்புலன்ஸ் சாரதியாக (ஓட்டுநராக) இவர் கடமையாற்றியுள்ளார்.

இந்த நிலையில், கிளிநொச்சி மருத்துவமனைக்கு அவசரமாக மருந்துகளை எடுத்து வருவதற்காக, மருத்துவமனைக்குச் சொந்தமான வாகனமொன்றை எடுத்துக்கொண்டு செல்லையா சதீஸ்குமார் கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார்.

எனினும், அவர் பயணித்த மருத்துவமனை வாகனத்தை வவுனியா பகுதியில் சோதனையிட்ட பாதுகாப்பு பிரிவு, அந்த வாகனத்திலிருந்து வெடிப் பொருட்களை எடுத்தது.

இதையடுத்து, செல்லையா சதீஸ்குமார் மீது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவரைக் கைது செய்திருந்தார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட செல்லையா சதீஸ்குமார் மீது சட்ட மாஅதிபர் குற்றப் பத்திரிகை தயார் செய்து, வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம், 2011ஆம் ஆண்டு, சதீஸ்குமாருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

அதையடுத்து, வழக்கின் தீர்ப்பை ஆட்சேபித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் எதிராளி மேல் முறையீடு செய்திருந்தார்.

எனினும், வவுனியா மேல் நீதிமன்றின் தண்டனைத் தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றமும் மீளுறுதிப்படுத்தி வழக்கை முடிவுறுத்தியது.
இலங்கை, பிரபாகரன்

இறுதியாக, 2017ஆம் ஆண்டு தீர்ப்பை மீளவும் உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு செய்த சதீஸ்குமார், நீதி நிவாரணத்தைக் கோரி காத்திருந்தார்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், சதீஸ்குமாருக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வாறு 15 வருடங்கள் சிறைக்குள் இருந்த சதீஸ்குமார், அந்த காலப் பகுதியில் 6 புத்தகங்களை எழுதியுள்ளதுடன், 3 டிப்ளோமா பட்டப்படிப்புகளையும் சிறைக்குள்ளேயே நிறைவு செய்துள்ளார்.

பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை பெற்ற சதீஸ்குமார், கடந்த 17ம் தேதி தனது வீட்டை வந்தடைந்தார்.

இதையடுத்து, சதீஸ்குமாரை பார்வையிடுவதற்கு அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள் எனப் பலரும் அவரது வீட்டை நோக்கி வருகை தருகின்றனர்.

இவ்வாறான நிலையில், செல்லையா சதீஸ்குமார் பிபிசி தமிழிடம் தனது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

கேள்வி: உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுடன், நீங்கள் தொடர்புப்பட்டிருந்தீர்களா?

பதில்: எனது கைது காலம் 2008ம் ஆண்டு. அந்த காலம் இந்த வாழ்விட பகுதி, இந்த வாழ்விட மாவட்டம், விடுதலைப் புலிகளின் ஆளுகை பிரதேசமாக காணப்பட்டது.

அந்த வகையில், அந்த காலச் சூழல், சில விடயங்களில் சில ஈடுபாடுகளை செலுத்த வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருந்தது. அந்த வகையில், அந்த குற்றச்சாட்டை மறுத்து ஒதுக்க முடியாதொரு சூழல் என்றே நான் அதனை கூற வேண்டும்.

கேள்வி: நீங்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினராக செயற்பட்டிருக்கின்றீர்களா?

பதில்: இல்லை. நான் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அம்புலன்ஸ் ஓட்டுநராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அது கடுமையான போர் காலம்.

அந்த போர் காலத்திலே குண்டு வீச்சு தாக்குதல்களினாலும், ஏனைய யுத்த அனர்த்தங்களினாலும் காயமடைந்த பல தரப்பினரையும் மேலதிக சிகிச்கைளுக்காக கிளிநொச்சியிலிருந்து கொழும்பு, அநுராதபுரம், கண்டி போன்ற மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டி கால நேரமற்ற ஒரு கட்டாய பணி அந்த சந்தர்ப்பத்தில் இருந்தது.

மனிதாபிமான பணியாக கருதி, நான் கடமையாற்றிக் கொண்டிருந்த காலம் அது. அந்த காலப் பகுதியில் இப்படியான ஒரு சில விடயங்களும், அதாவது அமைப்பு சார்ந்த விடயங்களும் தவிர்க்க முடியாத ஒரு நிலைமை என்றே நான் அதனை குறிப்பிட விரும்புகின்றேன்.

கேள்வி: உங்களது 15 வருட சிறைவாசத்தின்போது உங்களுக்கு யார் மீதாவது கோபம் வந்ததா? அதாவது ‘விடுதலைப் புலிகள் என்னை இவ்வாறு சிக்க வைத்தார்கள்’ என்றோ அல்லது ‘ராணுவம் என்னை கைது செய்து இவ்வாறு சிறை பிடித்திருக்கின்றது’ என்றோ கோபம் இருக்கிறதா?

பதில்: நிச்சயமாக, என் வாழ்க்கை கேள்விக்குட்படும் போது நான் ஏதோ ஒரு தரப்பு மீது கோபப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதை மறுக்க முடியாது. அந்த சூழலில், அதாவது விடுதலைப் போராளிகளுக்கும், அரச படையினருக்கும் இடையிலான அந்த இன முறுகல் ஏற்பட்டது.

இதை ஒரு தரப்பு மீது மாத்திரம் குற்றம் சுமத்தி, நாம் ஒதுங்கி இருந்து பார்வையாளர்களாக இருந்து விட முடியாது.

காரணம் என்னவென்று கேட்டால், தொன்றுதொட்டு இலங்கை அரசாங்கங்களினால் தமிழ் மக்களுடைய அடிப்படை பிரசினைகள், நியாயமான கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த போர் நிலைமை உருவானது.

அந்த சூழல் தவிர்க்க முடியாத சூழல், காலத்தின் கட்டாயம் ஆகிய நிலைமை காணப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு காரணமானவர்கள் யார் என்று பார்க்கும் போது, என் மீது குற்றம் சுமத்தியவர்கள் மீது நான் கோபம் கொள்வதில் நியாயம் இருக்கிறது என்றே கூற வேண்டும்.

கேள்வி: சிறைக்குள் இருந்து வெளியில் வரும் போது, உங்கள் மனதில் தோன்றியது என்ன?

பதில்: இறுதி நேரம் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளாகியே, அந்த சிறை கதவை விட்டு வெளியில் வந்துக்கொண்டிருந்தேன்.

என்னதான் இருந்தாலும் 15 ஆண்டுகள் சிறையில் கொடூரமான சுதந்திரம் பறிக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து மீளும் போது, அந்த தருணம் மிகவும் முக்கியமானது, வார்த்தைகளினால் அதனை வர்ணிக்க முடியாது. அப்படியொரு உணர்வு காணப்பட்டது.

அதேநேரம், நான் வெளியேறுவது ஒரு சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும், நான் விடை பெற்றுக் கொண்டு வந்த என் சக தோழமைகள், சிறையில் தொடர்ந்தும் இருப்பது மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் சோக நிலை

கேள்வி: சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் இருக்கதான் செய்கிறார்கள். அவர்களின் நிலைமை எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை சற்று உள்நோக்கி பார்ப்போமானால், விளக்கமறியல் சந்தேக நபர்களாக 14 பேரும், தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் 10 கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, வழக்கு நடக்கிறது. அவர்கள் விடுவிக்கப்படலாம். தண்டனைக்கு உட்படுத்தப்படலாம். அது நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட விடயம்.

தண்டனை அளிக்கப்பட்ட கைதிகள் சிலர் மேல்முறையீடு செய்திருக்கின்றார்கள். சிலர் தண்டனையை ஏற்று, தண்டனையை அனுபவித்து வருகின்றார்கள். இதில் மேல் முறையீடு செய்யப்பட்டவர்கள்தான் அதிக அளவில் காணப்படுகிறார்கள்.

இந்த தண்டனை அளிக்கப்பட்ட கைதிகளில் மூன்று மரண தண்டனை கைதிகளும் உள்ளார்கள். அதாவது தலதா மாளிகை குண்டு வெடிப்புடன் சம்பந்தப்பட்டவர், முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஷ்வரனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் உள்பட மூவர் உள்ளனர்.

இந்த தண்டனை அளிக்கப்பட்ட 10 பேருக்குள் இன்னுமொரு வயோதிபர் இருக்கிறார். அவர் தனக்காகவே தான் வாதிடுகிறார்.

அவர் கனகசபை தேவதாஸன். அவருடைய தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக கவலைக்கிடமாக இருக்கின்றது.

அவர் புற்றுநோயினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு தடவைகள் சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. அவரின் அன்றாட செயற்பாடுகளுக்கு கூட, அவர் இன்னொருவரை நம்பி வாழ வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

மனிதாபிமான ரீதியில் பிணையிலாவது தன்னை விடுதலை செய்யுமாறு அவர் கோருகிறார்.

அவரின் குடும்பத்தினர் இது குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அது இதுவரை கைகூடவில்லை. நிச்சயமாக அது நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறாவிட்டால், ஒரு துன்பகரமான செய்தியை கேட்க வேண்டியிருக்கும்.

அதேபோன்று கிளிநொச்சியை சேர்ந்த செல்லையா நவரட்ணம் என்ற இன்னுமொருவர் இருக்கின்றார்.

விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என 1996ம் ஆண்டு அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவரின் வழக்கு விசாரிக்கப்பட்டது.

செல்லையா நவரட்ணத்தின் வாழ்விடம் கிளிநொச்சி மாவட்டம். கிளிநொச்சி மாவட்டம் அந்த காலப் பகுதியில் போராளிகளின் ஆளுகை பிரதேசமாக காணப்பட்டது.

நீதி நடவடிக்கைகள் அரச ஆளுமை பிரதேசத்தில் இடம்பெற்றது. போர் காலத்தினால் போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக செல்லையா நவரட்ணம் என்ற முதியவருக்கு வழக்கு விசாரணைகளுக்காக நேரடியாக சமூகமளிக்க முடியாத நிலைமை காணப்பட்டது. இவர் சார்பில் குறைந்த பட்சம், ஒரு சட்டத்தரணி கூட ஆஜராக கூடிய சூழல் அங்கு இருக்கவில்லை.

போரினால் போக்குவரத்து துண்டிக்ககப்பட்டு, போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டதற்கு ஒரு குடிமகன் எவ்வாறு பொறுப்பு கூற முடியும்? ஆகவே தனது நியாயத்தை கூற முடியாது 70 வயதை கடந்த நிலையில் இருக்கிறார். இப்படி ஒவ்வொரு அரசியல் கைதியின் பின்னணியும் கவலைக்கிடமாக காணப்படுகின்றது.

ஆகவே ஒட்டுமொத்த கைதிகளும் விரைவில் ஏதோ வகையில் விடுவிக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் ஆளுகை பிரதேசத்தை வாழ்விடமாக கொண்டிருந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அவர்களினால் நேரடியாக நீதிமன்றத்திலே சமூகமளிக்க முடியாத சூழ்நிலை பற்றி நான் சொல்லியிருந்தேன்.

இந்த நிலையிலேயே அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பில், அவர்களின் சட்டத்தரணிகளோ, அவர்களோ, அவர்களின் உறவினர்களோ சமூகமளிக்காத நிலையிலே, நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் இறுதியில் அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் அந்த சந்தேகநபரின் பிரசன்னம் இல்லாமல் அவருக்கு பதிலாக கதிரை (நாற்காலி) வைத்து அவருக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவதாவது 200 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்க்கை காலம் 70 தொடக்கம் 80 வரை தான் இருக்கும் என நான் நினைக்கின்றேன். இந்த விடயங்களில் மனிதாபிமான ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி: சிறைவாசத்துக்குப் பிந்திய வாழ்க்கையை எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வதற்கும் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

பதில்: நான் கைது செய்யப்படும் போது எனது வயது 29. விடுதலையாகும் போது எனது வயது 44. மிகவும் முக்கியமான, சத்தாக வாழும் காலத்தை, 15 வருடங்களை இழந்துவிட்டேன். ஏதோ ஒரு காரணத்தினால், ஏதோ ஒரு தரப்பினால் 15 வருட வாழ்க்கை பறிக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு குடும்பஸ்தர் என்ற வகையில் எனக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. நான் கைது செய்யப்படும் போது எனது குழந்தைக்கு 3 வயது.

தற்போது அவர் உயர்தரம் கற்றுக்கொண்டிருக்கின்றார். எனது வாழ்க்கை துணைவி. எனது கைதிற்கு பிறகு, பொருளாதார, சமூக, அரசியல் பிரச்னைக்கு முகம் கொடுத்து, பாதுகாப்பு தரப்பின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில், இனிமேல் வாழ முடியுமா என்ற நிலைமை வந்துள்ளது.

அந்த காலப் பகுதியில்தான் எனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதையடுத்து, எனது மனைவி இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது நல்ல முடிவு என்றே நினைக்கின்றேன். எனது மகளும் தாயுடன் இருக்கின்றார்.

எனது குடும்பத்தின் நலன்களை கருத்தில் கொண்டு, எனது இழப்புகளை இழப்பாக கருதாமல், மீண்டும் எழுந்து குடும்பத்துடன் சேர்ந்து மிகுதி காலத்தை சந்தோஷமாக வாழ வேண்டும் என்றே நினைக்கின்றேன்.

கேள்வி: 15 வருட வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் நீங்கள் 6 புத்தகங்களை எழுதியுள்ளீர்கள். 3 டிப்ளோமா படிப்புகளை நிறைவு செய்துள்ளீர்கள். இதற்கான யோசனை எப்படி வந்தது?

பதில்: சுற்று மதில்களினால் சூழப்பட்ட ஒரு சிறை வாழ்க்கை என்பது ஒட்டு மொத்த சுதந்திரத்தை பறிக்கும் ஒரு துன்பகரமான வாழ்க்கை. எனது விளக்கமறியல் காலத்தில் எனது விடுதலையை நான் வெகுவாக எதிர்பார்த்திருந்தேன்.

அந்த வகையில் மூன்று வருடங்களின் பின்னர் எனக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பிற்கு பிறகு நான் ஒரு முடிவுக்கு வர வேண்டியிருந்தது. எனது விடுதலை சற்று தூரம் செல்லும் என்ற காரணத்தினால், என்னையே நான் ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. எனக்கு அடிப்படையில் வாசிப்பு அனுபவம் இருக்கிறது.

கிடைக்கிற பத்திரிகை துண்டாக இருந்தாலும், உணவு பொதியில் இருக்கின்ற பத்திரிகை பிரதிகள் என்றாலும் வாசித்திருக்கிறோம். அதன் பிறகு புத்தகங்களை வாசித்திருக்கின்றோம்.

அதன்பின்னர், என்னுடைய சிறை காலத்தை அர்த்தப்படுத்த நினைத்தேன். அந்த வகையில் நான்கு கவிதை தொகுப்புகளையும், ஒரு சிறுகதை தொகுப்பையும், ஒரு கட்டுரை தொகுப்பையும் நான் எழுதியுள்ளேன்.

கைதிகளின் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு விடயமாகவே நான் அதனை பார்க்கின்றேன். அந்த சிறைக் காலத்தை நிச்சயமாக அர்த்தப்படுத்த வேண்டும் என நினைத்தேன்.

என்னை சிறைக்குள் அடைத்து, என்னுடைய இளமைக் காலத்தை அபகரித்து, சிதைத்து, என்னை தோல்வி வாழ்க்கைக்கு உட்படுத்திய தரப்பிற்கு, நான் தோற்றுவிடக்கூடாது என்ற தீர்மானம், எனது மகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற ரீதியிலே நான் என்னை நானே வளப்படுத்திக் கொண்டேன். மூன்று டிப்ளோமா கற்கை நெறிகளை செய்திருக்கின்றேன்.

கேள்வி: தமிழ் அரசியல் கைதிகளை போன்றதுதான், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்னை. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: என்னுடைய தாயார் 15 வருடங்கள் என்னை பிரிந்திருந்து, அவர் விடுத்த கண்ணீர் போல 10 மடங்கு கனதியானது, காணாமல் போனோரின் தாய்மாரின் கண்ணீர். அவர்களில் பலதரப்பட்ட வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள்.

ஒரு ஜனநாயக நாட்டின் கோரிக்கையை ஏற்று, அவர்களைக் கையளித்து, அதன்பின்பு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் எல்லாம் இருக்கிறது.

அதனை எந்தவொரு தாயினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை இன, மத, மொழி என்று பெயர் வைக்க முடியாது. அவர்களின் கண்ணீர் மிக மிக கனதியானது.

அந்த தாய்மாரின் போராட்டத்திற்கு நிச்சயம் தீர்வு கிடைக்க வேண்டும். இவர்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அரசியல் செய்வது அநாகரிகமானது.
காணொளிக் குறிப்பு,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக