minnambalam.com : - aran : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு நலமாக இருப்பதாகவும் தற்போதைய இலங்கை சூழ்நிலையில் அவர் விரைவில் வெளியே தோன்றுவார் என்றும் இன்று (பிப்ரவரி 13) தஞ்சாவூரில் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.
அவருடன் ஈழத் தமிழரும் கவிஞருமான காசி ஆனந்தனும் உடன் இருந்தார். பழ. நெடுமாறனின் கருத்துக்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (பிப்ரவரி 13) ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியபோது பழ. நெடுமாறனின் கூற்று பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
“இதற்கு என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள்தான் இருக்கிறது. என் தம்பி சின்னவன் பாலச்சந்திரனை சாகக் கொடுத்துவிட்டு என் அண்ணன் பத்திரமாக தப்பிப் போயிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக நின்று சண்டை செய்தவர் என் அண்ணன்.
தன் உயிரை மட்டும் பத்திரமாக தற்காத்துக் கொண்டு தப்பிப் போகிற கோழை என்று நினைக்கிறீர்களா, என் அண்ணனை? போர் முடிந்து பேரழிவை சந்தித்துவிட்ட பிறகு சுமார் 15 ஆண்டுகளாக ஏதுமே பேசாமல் என் அண்ணன் பதுங்கியிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சொல்லிவிட்டு வருபவர் அல்ல என் அண்ணன், வந்துவிட்டுச் சொல்வார். அதான் அவரது பழக்கம். இதை அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு கற்பித்த தலைவர் அவர்.
அதனால் தேவையற்று போட்டு இதை குழப்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவரே சொல்கிறார் ஒரு நாள் மக்களுக்கு முன் தோன்றுவார் என்று. அப்படி தோன்றும்போது பேசுவோம்.
ஐயா பெரியாரிடம், ‘கடவுள் இல்லை இல்லை என்று சொல்கிறீர்களே… கடவுள் நேரில் வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘கடவுள் இருக்கிறார்’ என்று சொல்லிவிட்டுப் போகிறேன் என்றார்.
அதுமாதிரி ஐயா அவர்கள் சொன்னதுபோல் என் தலைவர் நேரில் வந்துவிட்டார் என்றால் வந்ததில் இருந்து பேசுவோம்” என்றார் சீமான்.
மேலும் அவர், “பழ.நெடுமாறனுக்கும் எனக்கும் அப்பா பையன் உறவு உள்ளது. இதுகுறித்து ஐயா என்னிடம் எதுவும் பேசவில்லை. மாவீரர் தினத்தன்று எனக்கு ஓர் அழைப்பு. லண்டனில் இருந்து பேசிய ஒருவர் என்னிடம், ‘அண்ணன் இருக்கிறார் என்று நீங்கள் மேடையில் சொல்ல வேண்டும்’ என்று என்னிடம் கேட்டார்கள்.
என் அண்ணனை சொல்லச் சொல் நான் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு நான் போய்விட்டேன். எங்கள் ஐயா என்னிடம் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை.
எல்லாரையும் போல செய்தியாளர் சந்திப்பில் கேட்டுதான் நானும் அவர் பேசியதை அறிந்துகொண்டேன். அதை விவாதத்துக்கு எடுக்காமல் அதைக் கடந்து போவது நல்லது” என்றார் சீமான். –வேந்தன்4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக