செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

இலங்கைக்கு சி.ஐ.ஏ. தலைவரின் வருகை நீடிக்கும் மர்மம்

 வீரகேசரி : “உலகெங்கும் பல படைத் தளங்களை அமெரிக்கா கொண்டிருந்தாலும், இப்போது, இலங்கையின் முக்கிய தளங்களை தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய வசதிகளை ஏற்படுத்துவது தான் அதன் இலக்கு”
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் கொழும்பு அரசியலில் மீண்டும் பேசுபொருளாக மாறத் தொடங்கியிருக்கிறது.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்குப் பின்னால், அமெரிக்கத் தூதுவர் இருந்தார் என்ற குற்றச்சாட்டு,
ஆளும் தரப்பில் இருந்தவர்களால் சுமத்தப்பட்டது.
ராஜபக்ஷவினர் இந்தக் குற்றச்சாட்டை வெளிப்படையாக முன்வைக்கவில்லை.


அவர்களின் ஆதரவாளர்கள் இதனை முன்னிறுத்தி குற்றம்சாட்டினார்கள்.
அவ்வாறான கருத்துக்களின் எதிர்விளைவுகள் அவர்களின் அமெரிக்கத் தொடர்புகள், நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் தான் அவர்கள் பதுங்குவதற்குக் காரணம்.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர், அமெரிக்கத் தலையீடுகள் குறித்த விமர்சனங்கள், சந்தேகங்கள், குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன.

இலங்கையின் அரசியல்வாதிகளில் தங்களை இடதுசாரிகளாக அடையாளம் காட்டிக் கொள்ளும் சிலருக்கு அமெரிக்க காய்ச்சல் இருக்கிறது.
பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டி.யூ. குணசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களை அவ்வாறு குறிப்பிடலாம்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண எப்போது, செய்தியாளர் சந்திப்பை நடத்தினாலும், திருகோணமலையில் அமெரிக்கா தனது படைத்தளத்தை அமைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கிறது, அமெரிக்கத் தளம் வரப் போகிறது என்ற கதையைத் தொடாமல் இருக்கமாட்டார்.
அந்தளவுக்கு அவருக்கு அமெரிக்க வெறுப்பு அல்லது பயம் இருக்கிறது.  இலங்கையில் அமெரிக்கா தளம் அமைத்து விடக் கூடாது என்பதற்காக, விடுக்கின்ற ஒரு முன்னெச்சரிக்கை என்றும் குறிப்பிடலாம்.

திருகோணமலையில் அமெரிக்கா தளம் அமைக்கவிருக்கிறது அல்லது தளம் அமைக்க விரும்புகிறது என்பது 1980களில் இருந்து காணப்பட்டு வருகின்ற ஒரு கருத்து.
இந்திய- இலங்கை உடன்பாட்டுக்குப் பின்னர் அவ்வாறான தளம் அமைக்கும் வாய்ப்பு இல்லாத சூழ்நிலை காணப்பட்டது. அப்போது இந்தியாவும் அமெரிக்காவும் எதிர் எதிர் முகாம்களில் இருந்தன.

ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருக்கிறது இந்தியா. இரண்டு நாடுகளும் பாதுகாப்பு ரீதியாக வலுவான தொடர்புகளைப் பேணுகின்றன.
இத்தகையதொரு நிலையில் இலங்கையில் உள்ள அமெரிக்க வெறுப்பு அரசியல்வாதிகளுக்கு, அமெரிக்க- இந்திய தளம் திருகோணமலையில் அமைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தோன்றியிருக்கிறது.

இவ்வாறான சந்தேகங்கள் தோன்றியிருந்த நிலையில் தான், கடந்த16ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோனைச் சந்தித்த,  அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின், இந்தோ-பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மைப் பிரதி உதவிச் செயலர் ஜெடிடியா ரோயல், திருகோணமலையில் தளம் அமைப்பது பற்றிய கலந்துரையாடலுக்காக தான் இங்கு வரவில்லை என்று கூறிக் கொண்டே, ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

இந்த தகவலை வெளியிட்டவர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தான்.
இதிலிருந்து, ஜெடிடியா ரோயலின் பயணம், ஏற்கனவே பேசப்படும் விடயங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று அல்ல என்பது வெளிச்சமாகியிருக்கிறது.
திருகோணமலையில் தளம் அமைப்பது குறித்துப் பேச வரவில்லை என்று அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டது, அவ்வாறானதொரு அச்சம் இலங்கைக்கு இருப்பதை மாத்திரம் புலப்படுத்தவில்லை.

அவ்வாறான அச்சம் இலங்கைக்கு இருப்பதை அமெரிக்கா அறிந்து கொண்டிருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
இதனை மட்டும் வைத்துக் கொண்டு திருகோணமலையில் தளம் அமைப்பது பற்றிக் கலந்துரையாடப்படவில்லை என்ற முடிவுக்கு வர முடியாது.
இரண்டு சி-17 குளோப் மாஸ்டர் போக்குவரத்து விமானங்களில், 14ஆம் திகதி மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க குழுவில் இடம்பெற்றிருந்த, ஜெடிடியா ரோயல், 16ஆம் திகதியே, தனி ஆளாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்திருந்தார்.

15ஆம் திகதி இந்தக் குழுவினர் கொழும்பில் என்ன செய்தனர், யாரைச் சந்தித்தனர் என்ற கேள்விகள் உலாவுகின்றன.
ஜனாதிபதியையும், புலனாய்வு அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்ததாக விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு ஆயுதங்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சென்ற போது, அங்கிருந்தவர்கள் நிராயுதபாணிகள் ஆக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள், தரவுகள், அமெரிக்க புலனாய்வுப் பிரிவினால் வடிகட்டப்படும் நிலை தோன்றியிருப்பதாகவும் அவர் எச்சரித்திருக்கிறார்.
ஆனால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
“அமெரிக்க குழு வந்து என்னையும் சந்தித்தது. அவர்களுடனான கலந்துரையாடலின் போது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் உக்ரைனில் ஏற்பட்ட போரின் விளைவுகள் மற்றும் பயிற்சி திட்டங்கள் மற்றும் வழக்கமான ஆர்வமுள்ள பிற விடயங்களைப் பற்றி பேசினோம்.

அதில் என்ன தவறு? நாம் முழு உலகத்துடனும் நட்புறவு கொண்ட ஒரு தேசம் மற்றும் யாருக்கும் எதிரிகள் அல்ல.
எனவே, மூத்த அரசியல்வாதிகள் பகிரங்க அறிக்கைகளை வெளியிடும்போது கவனமாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும்” என்று அவர் எச்சரித்திருக்கிறார்.
தற்போதைய அரசாங்கம், உண்மைகளை வெளியிடுகின்ற ஒன்று அல்ல என்பதால், இந்த விடயத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறுவதெல்லாம் சரியே எனக் கருத முடியாது.

ஜெடிடியா ரோயலின் இலங்கைப் பயணம் குறித்த கேள்விகளுக்கு மத்தியில் அவரது பயணமும், அவருடன் கூட வந்தவர்களின் பயணமும் ஒரே நோக்கம் கொண்டதா என்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கிறது.
ஏனென்றால், 14ஆம் திகதி மாலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இரண்டு விமானங்களிலும், 20இற்கும் அதிகமான அமெரிக்க அதிகாரிகள் வந்திருந்தனர்.

அவர்களில் ஜெடிடியா ரோயல் மட்டும், 16ஆம் திகதி பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரைச் சந்தித்திருந்தார்.
அவருடன் கூட வந்த யாரும், சந்திப்புகளில் பங்கேற்றிருக்கவில்லை.  இந்தச் சந்திப்பு நடப்பதற்கு முதல் நாளே, அதாவது 15ஆம் திகதி பிற்பகல் இரண்டு விமானங்களும் புறப்பட்டுச் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த விமானங்களில் வந்தவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் பயன்படுத்தும், விவிஐபி எனப்படும், மிக முக்கிய பிரமுகர்களுக்கான நுழைவாயில் வழியாகவே உள்வந்து வெளிச் சென்றுள்ளனர்.
அவர்களின் பயணத்தின் போது குடிவரவு அதிகாரிகளின் செயல்முறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார்.
அதுபற்றியெல்லாம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வாய்திறக்கவில்லை. இந்தக் குழுவினரின் பயணம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதென, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஜெடிடியா ரோயல், 16ஆம் திகதி தான் அமெரிக்க தூதரகத்துக்குச் சென்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் பேச்சு நடத்தியிருக்கிறார்.
அதற்கு முதல் நாளான, 15ஆம் திகதி அமெரிக்க தூதரகத்தில், ஒரு நிகழ்வு இடம்பெற்றது. கறுப்பு வரலாற்று மாதத்தை முன்னிட்டு,  தூதரகத்தில், பிளாக் லைவ்ஸ் மேட்டர் கொடி, அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள இன பாகுபாடு இல்லாத உலகத்தையும் அனைவருக்கும் சமமான வாய்ப்புள்ள எதிர்காலத்தையும் தேடும் மக்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வு அது.

அந்த முக்கியமான நிகழ்வில் கூட, ஜெடிடியா ரோயல் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றிருக்கவில்லை.
இந்த நிலையில் இலங்கைக்கு இரண்டு குளோப் மாஸ்டர் விமானங்களில், உச்சக்கட்ட பாதுகாப்புடன் வந்து சென்றது, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் தலைவர் வில்லியம் ஜே பேர்ன்ஸ் (William J Burns) என்று தெரியவந்திருக்கிறது.
அவர் சி.ஐ.ஏ. உயர் அதிகாரிகளுடன் ஒரு சிறப்பு விமானத்திலும், மற்றொரு விமானத்தில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களும் எடுத்து வரப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கொழும்பில் இருந்து இவர்கள், 15ஆம் திகதி புறப்பட்டு, நேபாளம் சென்று 18 மணித்தியாலங்கள் தங்கியிருக்க திட்டமிட்டிருந்தனர்.
எனினும், நேபாள அரசாங்கம் குறுகிய நேரத்தில் சிஐஏ தலைவரின் பயணத்துக்கு அனுமதி வழங்கவில்லை என்று காத்மண்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.ஐ.ஏ. தலைவரின் இலங்கைப் பயணம் குறித்து அரசாங்கம் இந்தப் பத்தி எழுதப்படும் வரை மூச்சுக் கூட விடவில்லை.
சி.ஐ.ஏ. தலைவர் வில்லியம் ஜே பேர்ன்ஸ், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு சீனா தான் காரணம் என்று பகிரங்கமாக கடந்த ஆண்டு குற்றம்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழ்நிலையில், அமெரிக்கத் தரப்பின் பயணம் தொடர்பாக  எழுகின்ற கேள்விகளும், அரசாங்கம் நடந்து கொள்ளும் முறையும், சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடிய தொன்று தான்.

இந்த நிலையில், திருகோணமலையில் தளம் அமைப்பது குறித்த பேச்சுக்களை அமெரிக்கா முன்னெடுக்கிறதா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
ஏனென்றால், இப்போது, அமெரிக்கா தளங்களை அமைப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை.
உலகெங்கும் பல படைத் தளங்களை அமெரிக்கா கொண்டிருந்தாலும், இப்போது, அது, அணுகல் மையங்களை அமைப்பதில் தான் கவனம் செலுத்துகிறது.
இலங்கையின் முக்கிய தளங்களை தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய வசதிகளை ஏற்படுத்துவது தான் அதன் இலக்கு.

நல்லாட்சிக் காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவ்வாறான நோக்கத்துக்கு அமெரிக்கா பயன்படுத்த ஆரம்பித்தது.
நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதில் இடையூறு ஏற்பட்டது.

அண்மையில் பிலிப்பைன்சில் ஐந்து தளங்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா உடன்பாடு செய்து கொண்டிருக்கிறது.
அதுபோலத் தான் இலங்கையிலும் தங்களின் படைகள் அணுகல் தளங்களை வைத்திருக்க அமெரிக்கா விரும்பக் கூடும்.

அது திருகோணமலையாகவோ, கட்டுநாயக்கவாகவோ அல்லது வேறெந்த தளமாகவோ இருக்கலாம்.
அது எதுவாக இருந்தாலும், இலங்கையைக் கையாளும் விடயத்தில் அமெரிக்க அணுகுமுறையில் அத்தகைய முயற்சிகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.-ஹரிகரன்–

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக