புதன், 8 பிப்ரவரி, 2023

நாடாளுமன்றத்தில் கனிமொழி : இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லானும் கெடும்’

 minnambalam.com  Aara  :  ஆளுநர்களுக்கு சொல்லிக் கொடுங்கள் – நாடாளுமன்றத்தில் கனிமொழி
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (பிப்ரவரி 7) திமுக சார்பில் கனிமொழி எம்பி பேசினார்.
அப்போது அவர், “1967 ஆம் ஆண்டு  எங்களது மூத்த முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் ராஜ்யசபாவில் பேசும்போது,
‘ஆளுநர்கள்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநில அரசுகளுக்கு எதிரான கருவிகளாக ஒன்றிய அரசால் பயன்படுத்தப்படுகிறார்கள்’ என்று பேசினார்.
இதை நான் சொல்லவில்லை, பேராசிரியர் சொன்னதை இங்கு நான் குறிப்பிடுகிறேன்.


இப்போதும் கூட தமிழ்நாடு ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சுமார் இருபது சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கிறார்.  ஆன் லைன் சூதாட்டத்தை தடை செய்யும் முக்கியமான சட்ட மசோதாவும் அதில் ஒன்று.
தமிழ்நாடு மட்டும் இப்படி போராடிக் கொண்டிருக்கிறது என்றில்லை… மேற்கு வங்காளம், கேரளா, தெலங்கானா, நாகாலாந்து என எங்கெல்லாம் பாஜக அரசு இல்லையோ அங்கெல்லாம் மாநில ஆளுநர்களோடு போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் அமைப்பு சாசனத்தில், ‘ஒரு மாநில ஆளுநர் என்பவர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாநில அமைச்சரவையின் பரிந்துரையின்படிதான்  முடிவெடுக்க முடியும

எனவே பாஜக ஆளாத மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆளுநர்களிடம் அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சாசனத்தைக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.

இந்த நாடு கூட்டாட்சியின் படி செயல்படும் நாடு என்பதை அவர்களுக்கு புரியவைக்க முயற்சி செய்யுங்கள்.

ஆனால் இதையெல்லாம் நீங்கள் கேட்க மாட்டீர்கள். இங்கே திரு. ராகுல் காந்தி பேசும்போது கூட நீங்கள் குரல் எழுப்பிக் கொண்டிருந்தீர்கள்.  கவனிப்பது, கற்றுக் கொள்வது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதது.

இந்த முறை பட்ஜெட்டில் கூட நீங்கள் திருவள்ளுவரை மறந்துவிட்டீர்கள். ஏனென்றால் இப்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் எதுவும் இல்லை. அதனால் நான் உங்களுக்கு ஒரு திருக்குறளை நினைவுபடுத்துகிறேன்.
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லானும் கெடும்’. அதாவது, விமர்சனங்களை பொருட்படுத்தாத மன்னன் எதிரிகள் இல்லாமலேயே வீழ்ந்து போவான்.

அதாவது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாத, மக்களின் குறைகளை பொருட்படுத்தாத, பத்திரிகைகளின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாத  ஒரு ஆட்சியை வீழ்த்த எதிரிகளே தேவையில்லை.  அவர்களே வீழ்ந்துபோவார்கள். இதைத்தான் இந்தத் திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டார். –வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக