செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

சிவகாசி குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் : தமிழ்நாட்டில் தொடரும் அவலம்!

 minnambalam.com  - christopher  : சிவகாசி அருகே உள்ள கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் நாய் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சமீப காலமாக தண்ணீர் தொட்டிக்குள் மனிதக்கழிவுகள், சடலம் கண்டெடுக்கப்பட்டு வருவது கடும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் இருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவுகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிப்ரவரி 1ம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குள் 9 நாட்களாக அழுகிய நிலையில் ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்பத்தினர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கரனின் மூத்த மகன் சரவணக்குமார் என்பவர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் தான் சிவகாசி அருகே கிராமம் ஒன்றில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியை சுத்தம் செய்வதற்காக கடந்த 2 நாட்களாக தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் நாயை கொலை செய்து இந்த தண்ணீர் தொட்டிக்குள் வீசி எரிந்துள்ளனர். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மேலே ஏறி சென்ற பொதுமக்கள், நாயின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், தொட்டியில் இறந்த நாயின் சடலத்தைப் போட்டுச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் குடிநீர் தொட்டிக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபகாலமாக தொடர்ச்சியாக குடிநீர் தொட்டிக்குள் மலம், சடலங்கள் வீசப்படுவது வாடிக்கையாக நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக