சனி, 18 பிப்ரவரி, 2023

சீனாவை புறந்தள்ளி இலங்கைக்கு உதவும் சர்வதேச நாணய நிதியம்!

hirunews.lk : சீனாவின் கடன் மறுசீரமைப்பு இல்லாவிட்டாலும் கூட இலங்கைக்கான நிதியுதவியை அனுமதிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக புலும்பேர்க் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த தகவலை எதிர்வுகூரலாக புலும்பேர்க் தெரிவித்திருந்தது.
இதன்போது சீனா வழங்க மறுக்கும் மறுசீரமைப்புக்கு பதிலாக மேலதிக நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம், மேலும் கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இலங்கைக்கான நிதியுதவியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம், அதன் கடன்கொடுனர்களில் இருந்து மறுசீரமைப்புக்களை எதிர்பார்த்திருந்தது.
எனினும் இந்தியா ஜப்பான் மற்றும் தனியார் பிணையாளிகள் கூட 10 வருட கடன் ரத்து மற்றும் 15 வருட கடன் மறுசீரமைப்பு என்ற கொள்கைக்கு இணங்கிய நிலையில் சீனா இரண்டு வருட கடன் ரத்துக்கு அப்பால் செல்ல மறுத்தது.
இதனையடுத்தே சீனாவின் ஆதரவில்லாமல் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி குறித்து ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ஜி20 நாடுகளின் கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் இந்தியாவில் இடம்பெறும்போது அதில் அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெல்லன் பங்கு கொள்கிறார்.
இதன்போது நெருக்கடியான நாடுகளுக்கான கடனுதவிகளை தடுக்கும் நிலைகளை தவிர்ப்பதற்கான செயற்பாடுகளை அமெரிக்கா எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை மையப்படுத்தியே எதிர்வரும் மார்ச் மாதத்தில் சர்வதேசய நாணய நிதியத்தின் நிதியுதவியை எதிர்ப்பார்க்கலாம் என்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக