வியாழன், 9 பிப்ரவரி, 2023

அதானி… அதானி… மோடி… மோடி…: ராகுலை கடுமையாக சாடிய பிரதமர் மோடி

 minnambalam.com  -  Kavi  :  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 8) உரையாற்றினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அதன் பின் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் தொடங்கியது. ஆனால் அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும், இதற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால் இதற்கு அனுமதி மறுக்கவே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவையும் தொடர்ந்து முடங்கியது.


இந்நிலையில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பேசும் போது, அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு? பிரதமர் வெளிநாடு சென்றாலே அதானிக்கு ஒப்பந்தம் கிடைக்கிறது. 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
நாடெங்கும் , அதானி, அதானி, அதானி என்ற ஒற்றை வார்த்தைதான் கேட்கிறது என ஆவேசமாக பேசினார்.

இந்தநிலையில் இன்று (பிப்ரவரி 8) மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார்.

அப்போது ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பேசிய பிரதமர் மோடி, “ஒரு உறுப்பினரின் பேச்சுக்கு பிறகு ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் (எதிர்க்கட்சிகள்) உற்சாகமாக குதிப்பதை பார்த்தேன்.

இதனால் இன்று எழுந்திருக்கக் கூட முடியாத அளவுக்கு அவர்கள் தூங்கியிருக்கலாம்.
ஒரு சிலர் பேசியதை கூர்ந்து கேட்டபோது அவர்களுக்கு புரிதலும், திறனும் குறைவாக இருப்பது தெரியவருகிறது” என்றார்.

மேலும் அவர், “பல நாடுகள் போர் காரணமாக ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன. அண்டை நாடுகள் கூட பணவீக்கம், வேலையின்மை உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

கடினமான காலங்களில் கூட இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது.
ஜி20 தலைமை இந்தியாவுக்கு கிடைத்தது 140 கோடி மக்களுக்கும் கிடைத்த பெருமை. இந்தியா ஒரு உற்பத்தி மையமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் செழுமையில் உலகமே அதன் செழுமையைக் காண்கிறது.

விரக்தியில் இருக்கும் சிலரால் இந்நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களின் சாதனைகளைப் பார்க்க அவர்கள் தவறிவிடுகிறார்கள்.
கடந்த 9 ஆண்டுகளில் 90000 ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் தொடங்குவதில் உலக அளவில் 3வது இடத்தில் இருக்கிறோம்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் அரசியல் உறுதியற்ற தன்மை இருந்தது. இன்று, எங்களிடம் ஒரு நிலையான மற்றும் தீர்க்கமான அரசாங்கம் உள்ளது. நாட்டின் நலனுக்காக முடிவுகளை எடுக்கும் தைரியம் எப்போதும் எங்களிடம் உள்ளது.

கொரோனா தொற்று நோயின் பாதிப்பின் போது இந்தியா 150 நாடுகளுக்கு உதவியது. இதனால் உலக நாடுகள் இந்தியாவை பாராட்டுகின்றன.
2004 முதல் 2014 வரை இந்தியாவின் குரல் உலக அளவில் பலவீனமாக இருந்தது. 2004 முதல் 2014 வரை இந்தியாவில் ஊழல் அதிக அளவில் இருந்தது. இப்போது ஊழலில் இருந்து நாடு விடுதலை பெற்றுள்ளது.

விலைவாசி உயர்வு தற்போது கட்டுக்குள் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்த உரையின் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி, அதானி, அதானி என கோஷம் எழுப்ப, பாஜகவினர் மோடி, மோடி, மோடி என முழக்கமிட்டனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு நடுவே காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். –பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக