திங்கள், 27 பிப்ரவரி, 2023

தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கை கடலுக்குள் அனுமதியா? போராடத் தயாராகும் யாழ் மீனவர்கள்

மீன்பிடிப் படகு

BBC News, தமிழ்-  ரஞ்சன் அருண் பிரசாத் : இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்க ப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என, இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் சிறு படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கின்றமை தொடர்பில் வெளியான செய்தி குறித்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பிபிசி தமிழ் வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி பத்திரம் விநியோகிக்கப்படுகின்றமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது கலந்துரையாடப்படும் என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேற்கோள்காட்டி, இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் சில அண்மையில் செய்திகளை வெளியிட்டிருந்தன.

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது எனவும், இரு நாடுகளினதும் கடல்வளங்கள் மோசமாக அழிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டெல்லி விஜயத்தின் போது, இந்திய அரசாங்கத்துடன் இந்த விடயம் தொடர்பில் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் அமைச்சரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களை அனுமதிக்கும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் வடமராட்சி மீனவ சங்கத்தின் பிரதிநிதியான நாகராசா வர்ணகுலசிங்கம், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த தீர்மானத்திற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து, இன்றைய தினம் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

யாழ் மாவட்ட சம்மேளன கூட்டத்தின் போது, மீனவர்களுக்கு எதிராகவே சர்வாதிகார முறையில் அமைச்சர் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிப்பதற்கு எதிராக 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தாம் கோரிக்கை விடுப்பதாகவும், அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்திய இழுவை படகுகளினால், தாம் 60, 70 கோடி ரூபாவிற்கு மேல் இழந்துள்ளதாகவும், அதற்கான நியதி இன்று வரை கிடைக்கவில்லை எனவும் நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவிக்கின்றார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதில்

இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கின்றமை தொடர்பில் இதுவரை எவரும், எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
ஊடகங்களில் தொடர்ச்சியாக போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

''எனக்கு தெரிந்த வகையில், நான் அந்த முடிவை எடுக்கவில்லை. யார் முடிவெடுத்தது என்று எனக்கு தெரியாது. நான் முடிவெடுக்கவில்லை என்றால், ஜனாதிபதியும் முடிவெடுத்திருக்க மாட்டார். நாங்கள் இருவர் மாத்திரமே சம்பந்தப்படுவோம். வேறு யாரும் இதற்குள் சம்பந்தப்பட முடியாது அல்லவா?.

பொய் வதந்திகளை கிளப்பும் அரசியல்வாதிகள் இந்த முடிவை எடுத்திருக்கின்றார்களோ தெரியவில்லை. இந்திய - இலங்கை தரப்புகளுக்கு இடையிலான ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடரும். அதேபோன்று, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக வருகைத் தருவோருக்கு எதிராக 2017, 2018ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட எமது சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். அதாவது, கைதுகள், படகுகளை அரசுடமையாக்குவது, முதல் தடவையாக எமது எல்லைக்குள் வருகைத் தருவோரை நீதிமன்றில் முன்;னிலைப்படுத்தி விடுதலை செய்வது உள்ளிட்ட சட்டங்கள் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படும்" என அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிபிசி தமிழுக்கு பதிலளித்தார்.

''அவரின் இந்திய விஜயத்தின் போது, வேறு வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும். எங்களின் கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பான விடயங்களை செய்ய மாட்டோம். எங்களின் கடற்றொழிலாளர்களுக்கும், எங்களின் கடல்வளங்களுக்கும் பாதிக்கும் வகையில் நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம். வேறு பொருளாதார ஒப்பந்தங்கள் செய்யலாம்" என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மீன்பிடிப் படகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக