Dhinakaran Chelliah : ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது திருவாளர் சீமான் அவர்கள் அருந்ததியர் சமூகம் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு குடியேறிய வந்தேறிகள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக இரு நூல்கள் என் கவனத்தை ஈர்த்தன,
ஒன்று முனைவர் ச.சீனிவாசன் அவர்கள் எழுதிய தமிழக அருந்ததியர்: வரலாறும் வாழ்வும்(விலை ரூ.200, தொடர்புக்கு 9911223484),
இன்னொன்று எழில்.இளங்கோவன் அவர்கள் எழுதிய அருந்ததியர் வரலாறு வினாவும்-விளக்கமும், முதற் பதிப்பு 1998.
இந்த இரு நூல்களும் அருந்ததிய சமூகத்தினர் தமிழகத்தில் வீரமும் செழிப்பும் மிக்கவர்களாக வாழ்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் தமிழ் நிலத்தின் ஆதிக் குடிகள் எனும் கூற்றையும் இனவரைவியல் குறிப்புகள்,கல்வெட்டுகள்,சங்க நூல்கள் உள்ளிட்ட பல சான்றுகளை முன்னிறுத்தி எழுதப்பட்டவை.
இந்த இரு நூல்களையும் இணையத்தில் கண்ணில் தென்பட்ட தரவுகளைத் தாண்டி எனது பாணியில் தேட ஆரம்பித்த போது பழம் பெரும் நூல்களில் “சக்கிலியர்களைப்” பற்றிய குறிப்புகள் கிடைத்தன.அசாத்தியமான அரசியல் சூழல் கருதி இங்கே அவற்றை பகிர்ந்து கொள்வது எனது கடமை என்பதை உணர்கிறேன்.
அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் எழுதுகிறேன்,
சைவ ஆகம நூல்கள் 28ல் முதன்மையானதும் பழமையானதும் காமிகம் எனும் காமிகாகமம் எனும் நூலாகும்.இது எழுதப்பட்ட காலம் என 1100BCE என்ற தகவலும் இணையத்தில் கிடைக்கிறது. இந்த நூலில் ‘சக்கிலியர்களைப்’ பற்றிய குறிப்பு உண்டு. இது தவிர ‘இழிசினன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்.இது தவிற ‘புலையர்கள்’,’இழிபிறப்பாளர்கள்’ எனும் பெயர்களில் பாடல்களும் தரவுகளும் அதிகம் கிடைத்தாலும் அவற்றை இங்கு குறிப்பிடவில்லை.
1889 வருடம் அச்சிடப்பட்ட காமிகாகமம் - பூர்வபாகம் நூலில் பத்தாவது படலமான நிமித்த பரீக்ஷை விதிபடலம் எனும் பகுதியில், நிமித்தம் பார்க்கும் போது நல்ல சகுனம் எது தீய சகுனம் என விளக்கும் போது சக்கிலியர் பற்றிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது.
“பசுவின் தும்பல் மரணத்தைக் கொடுக்கும்.வெல்லம் எலும்பு கறுப்பு தான்யம்,பருத்தி நெருப்பு உற்பத்தியாகும்படியாகிய வஸ்து,விதி வசமாக விரகுகளின் (a conceited person) பார்வை மிகவும் சோகத்தைத் தரும்.
சக்கிலி,தலைமயிர் பிரித்துப் போட்டுக்கொண்டு வருகிறவன் முதலாகியவை,சண்டை பசியினால் இளைத்து வாடி வருகின்றவன்,மொட்டைத் தலையர் இவர்களுடைய பார்வையும்,அழுக்கு வஸ்திரம் முதலானவைகளைக் கட்டிக்கொண்டு விகாரமாயிருக்கிறவன், நாஸ்திகன், பௌத்தர் முதலானவரின் பார்வையும் துக்கத்தைக் கொடுப்பதாகும்.”
இந்த ஆகம நூல் மட்டுமல்ல பல்வேறு சிற்ப சாஸ்திர நூல்கள்,வாஸ்து நூல்களிலும் சக்கிலியர் பற்றிய குறிப்புகள் உண்டு.
சங்க காலத்து பாடல்களில் இழிசினன் என்று சக்கிலியர் பற்றிய குறிப்புகள் உண்டு, அதில்
தோல் வாரைப் பயன்படுத்திக் கட்டில் கட்டும் தொழிலாளி தன் ஊசியை எவ்வளவு விரைவாகக் கோத்து வாங்குகிறான் என்பதைச் சாத்தந்தையார் என்ற புலவர் பாடுகிறார். அவர் சிறப்பாகத் தொழில் புரிந்தாலும் இழிசினன் (இழிகுலத்தான்) என்றே இகழ்கிறார். அந்தப் பாடல் வரி இது:
“கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதே”
சோழன் பெருநற்கிள்ளி மற்போரில் காட்டும் வேகம், இழிசினன் (சக்கிலி) தோல் தைக்கும் ஊசியின் வேகத்துக்கு நிகராக இருக்கிறது என்கிறார் புலவர். தொழில் திறமை இருந்து என்ன பயன்? தோல் தைப்பதால் இழிந்தவன் என்று சமூகம் கூறும் இகழ்ச்சி நீங்க வழியில்லையே எனும் பொருளில் அமைந்துள்ளது இப்பாடல்.
அய்யா வைகுந்தர் இயற்றிய ‘அகிலத்திரட்டு அம்மானை’ நூலிலும் சக்கிலியர் பற்றிய குறிப்பு உண்டு.
சக்கிலி என்பது தெலுங்கு சொல் எனவும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருமுன்பு அத்தொழிலை புறம்பர்(செம்மார்) எனும் தமிழ் வகுப்பார் செய்து வந்ததாகவும் ஒப்பியன் மொழிநூலில் பதிவு செய்கிறார் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்.
ஆனால் காமிகாகமம் எனும் சைவ ஆகம நூலும் ஏனைய சிற்ப சாஸ்திர நூல்களும் விஜயநகரப் பேரரசு (கி.பி 1336 - 1646) தோன்றுவதற்கு முன்பிருந்தே வழக்கில் இருந்த நூல்கள். இன்று நாம் கண்டு அதிசயிக்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் ஆகமங்களின் அடிப்படையில் அமைந்தவை.குறிப்பாக காமிகாகமம் பெரும்பாண்மையான சிவ ஆலயங்களில் பின்பற்றப்படும் ஆகமம் ஆகும்.
இந்த நூல்கள் குறிப்பிடும் சக்கிலியர் எனும் அருந்ததியர் தமிழகத்தில் விஜயநகரப் பேரரசுக்கு முன்பிருந்து தமிழகத்தில் வசிக்கும் பூர்வீக ஆதிக்குடிகள் என்பதை அரசியல்வாதிகளும் மக்களும் உணர வேண்டும்.
குறிப்பு: காமிகாகமம் - பூர்வபாகம் நூலின் சில பக்கங்களை பின்னூட்டத்தில் இணைக்கிறேன்
கூமுட்டை தனமாக பதிவு செய்ய வேண்டாம் செம்மான் என்பது பரையரில் ஓர் பிரிவு அதே போல கேரள பரையர்கள் தான் புலையர்கள் வாய்க்கு வந்ததை உளர வேண்டாம்
பதிலளிநீக்கு