மாலை மலர் : பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் மஹால் பலூச் என்ற பெண்ணை பயங்கரவாத ஒழிப்பு படை சமீபத்தில் கைது செய்தது.
அவரது கைப்பையில் இருந்து, தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தும் கவச உடை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிலையிலான 4 முதல் 5 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபற்றி தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், பலூசிஸ்தான் விடுதலை முன்னணி பிரிவுக்கு ஆதரவளிக்கும்படி மஹால் பலூச் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பயங்கரவாத அமைப்பினரால் பலூச் பயன்படுத்தப்பட்டு உள்ளதுடன், ஆதரவு தெரிவிக்க நெருக்கடியும் கொடுக்கப்பட்டு உள்ளது.
பலூச் அவரது குழந்தைகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு உள்ளார். அதன்பின்னர், தற்கொலை படை பயங்கரவாதியாக மாற்றப்பட்டு உள்ளார். பலூசிஸ்தான் தாய்மார்களும், சகோதரிகளும் தீய நோக்கங்களுக்காக பயங்கரவாத அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பலூசிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு படை செய்தி தொடர்பாளர் கூறும்போது, குற்றச்சாட்டுக்கு ஆளான தற்கொலை படை பயங்கரவாதியான மஹால் பலூச், குவெட்டா நகரில் முக்கியம் வாய்ந்த பகுதிகளை அல்லது பாதுகாப்பு படையினரை தாக்க திட்டமிட்டு இருந்துள்ளார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
எனினும், மஹால் பலூச்சை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் பலூசிஸ்தானின் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி சென்ற அவர்கள், உடனடியாக பலூச் விடுதலை செய்யப்பட வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் ஒடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். பலூச் மீது வழக்குகளை ஜோடித்து உள்ளனர் என்றும் அவர்கள் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், பலூச்சுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற உறுப்பினர்களை கைது செய்வதற்காக பலூசிஸ்தானில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக