minnambalam.com - Aara : “நல்லா பண்றீங்க தம்பீ…”- பிடிஆரை பாராட்டிய அழகிரி
திருமண நிகழ்வுகளில் அவ்வப்போது அரசியல் திருப்பங்களும் ஏற்படுவது தமிழகத்தில் நடப்பது தான்.
அந்த வகையில் இன்று பிப்ரவரி 19 மதுரையில் நடந்த ஒரு திருமணத்தில் நிதி அமைச்சர் பிடிஆரும் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும் முதலமைச்சர் ஸ்டாலினின் அண்ணனுமான அழகிரியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
ஒரு காலத்தில் அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த எஸ் ஆர் கோபியின் மகள் திருமணம் இன்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி திருமண அரங்கத்தில் நடைபெற்றது.
அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு கோபி சில காலம் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளராக இருந்தார். அமைச்சருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிறகு நிதியமைச்சர் பி டி ஆர் உடன் அணி சேர்ந்தார்.
அழகிரியை பார்த்ததும் அமைச்சர் பிடிஆர் அவர் அருகே சென்று கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள். ’அம்மா எப்படி இருக்காங்க?’ என்று பிடிஆரிடம் அவரது தாயாரின் நலம் விசாரித்தார் அழகிரி. ‘நல்லா பண்றீங்க தம்பி’ என்று பி.டி. ஆருக்கு பாராட்டும் தெரிவித்தார் அழகிரி. இந்த திருமண விழாவில் சீனியரான பொன் முத்துராமலிங்கமும் கலந்து கொண்டு சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.
மதுரையில் நடந்த இந்த திமுக பிரமுகர் திருமணத்திற்கு அமைச்சர் மூர்த்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்தான் மதுரையில் அழகிரி இல்லத்துக்கு அமைச்சர் உதயநிதி வந்து சென்றிருந்தார். அழகிரி குடும்பத்தினருக்கும் ஸ்டாலின் குடும்பத்தினருக்குமான உறவு வலுவடைந்து வரும் நிலையில் இன்று அமைச்சருடன் அழகிரி கலந்துகொண்ட திருமணம் மதுரை அரசியலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக