வியாழன், 23 பிப்ரவரி, 2023

தமிழ்நாட்டில் சமத்துவ எண்ணங்கள் வேரூன்றவே இல்லை?

 மணி மணிவண்ணன் :  சென்னையின் பணக்கார வட்டாரம் என்ற விழியப் பதிவு ஒன்றைத் தற்செயலாகப் பார்த்தேன்.  
நாங்கள் முன்பு குடியிருந்த இராசா அண்ணாமலைபுரத்துக்கு அருக்கில் இருக்கும் படகுக்குழாம் (போட் கிளப்) வட்டாரம்தான் சென்னையிலேயே பணக்கார வட்டாரமாம்.  
ஒரு சதுர அடிக்கு 45,000 ரூபாய் விலை போகிறதாம்.  
இந்த வட்டாரம் எனக்குப் பழக்கமானதுதான்.  
வீட்டில் இருந்து அலுவலகத்துக்குச் செல்லும் வழி என்பதாலும், போட் கிளப்பில் உறுப்பினராக இருக்கும் என் நண்பரைச் சந்திக்கச் சென்றதாலும்,
அருகில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் குழும விடுதிக்குச் சென்றிருப்பதாலும்
பல முறை இதன் வழியே சென்றிருக்கிறேன்.  


பார்ப்பதற்கு எந்த அமெரிக்கப் பெருநகரத்துக்கும் அருகில் உள்ள புறநகர்ப் பகுதிகளின் நடுத்தரக் குடும்பப் பகுதிகளைப் போலத்தான் போட் கிளப் பகுதியும் இருக்கும்.  

தூய்மையான தெருக்கள், தனித்தனி வீடுகள், தோட்டங்கள், புல்தரைகள், நிழல்தரும் மரங்கள், மக்கள் நடமாட்டம் குறைந்த வீதிகள், கடைகளே இல்லாத குடியிருப்புகள் என்ற கட்டமைப்பு
அமெரிக்கப் புறநகர்களில் அடிப்படை.
 படகுக்குழாம் பகுதியிலும் எதை வாங்க வேண்டுமானாலும் வட்டாரத்தின் விளிம்பில் உள்ள பெருவீதிக்கு வந்துதான் வாங்க வேண்டும்.  
ஆனால், அவர்கள் அந்தக் கடைகளில் எதையும் வாங்குவதில்லை.  கடைகளுக்குச் சென்று வாங்குவதற்கும் பணியாட்கள் வைத்திருப்பவர்கள் வாழும் இடமல்லவா.

அந்த இடத்தைப் பற்றிய மலைப்பு எனக்கு ஏதும் அப்போதும் இருந்ததில்லை.  இப்போதும் இல்லை.  
இந்தியா போன்ற மக்கள் தொகை கூடிய நாட்டில் இது போன்ற நகரப்பகுதிகள் அரிது என்பது புரிகிறது.  ஆனால், ஆளரவம் அற்ற அந்தத் தெருக்களில் நடமாடுவதற்கே அஞ்சும் பதிவர்கள் வியப்பூட்டினார்கள்.  

அவர்கள் அச்சம் எல்லாம் இந்தப் பணக்கார வட்டத்தில் வந்து நடமாட நீ யார் என்று யாரேனும் விரட்டுவார்களோ என்பதும்,
தம்மைத் திருடர்கள் என்று கணித்து விடுவார்களோ என்பதும்தான்.
அங்கே தோட்ட வேலை பார்க்கும் பணிப்பெண்களோடு அவர்கள் நடத்திய உரையாடல் மலைக்க வைத்தது.  

பணிப்பெண்கள் மாதம் 8500 ரூபாய் சம்பளம் பற்றியும்,
தமக்கு விழாக்காலத்தில் கிடைக்கும் துணிகளைப் பற்றியும் நிறைவு இருந்தது.  
ஆண்களை விடக் குறைவான சம்பளம் பற்றிய வருத்தம் ஏதும் இல்லை.

நடுத்தரக் குடும்ப வாழ்வை மேற்கொண்டிருக்கும் நிறைவு அவர்களிடம் இருந்தது.  
தம் முதலாளிகளிடம் நன்றி பாராட்டினார்கள்.  
கேரளாவில் தொழிலாளர்களிடம் இருக்கும் தன்மதிப்பும், தாமும் தம் முதலாளியும் இணையானவர்கள் என்ற எண்ணமும் சற்றும் இவர்களிடம் இல்லை.  

பொதுவாகவே தமிழ்நாட்டில் அத்தகைய சமத்துவ எண்ணங்கள் வேரூன்றவே இல்லை.   
எவ்வளவு படித்திருந்தாலும், என்ன தொழில் செய்தாலும், செல்வத்தில் உயர்ந்தவர்களை,
சமூகத்தில் மேலிடத்தில் இருப்பவர்களைத் தமக்கு இணையான மனிதர்களாகப் பார்க்கும் எண்ணம் தமிழ்நாட்டில் பொதுவாக இல்லை.  
ஒரு சில பொதுவுடமைக் கட்சித் தோழர்களிடம் மட்டும் இருக்கலாம்.  அதுதான் வியப்பளிக்கிறது.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை விட சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்பதுதான் தமிழ்மண்ணில் ஊறியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக