திங்கள், 20 பிப்ரவரி, 2023

இரண்டு வாரங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிக நிலநடுக்கங்கள் - சிக்கித் திணறிய துருக்கி

maalaimalar :  துருக்கியில் பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
"இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து துருக்கியில் 6 ஆயிரத்து 040 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 1628 நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவு கோளில் 3 முதல் 4 ஆகவும், 436 முறை 4 முதல் 5 ஆகவும் பதிவாகி உள்ளது. 40 முறை ரிக்டர் அளவில் 5 முதல் 6 ஆக பதிவாகி இருக்கிறது. இதுதவிர 6.6 அளவிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டு இருக்கிறது," என நிலநடுக்கம் மற்றும் ஆபத்து குறைக்கும் திட்ட இயக்குனர் ஆர்ஹன் டட்டார் தெரிவித்தார்.


மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து இது போன்ற நிலஅதிர்வுகள் நீண்ட காலத்திற்கு தொடரும். இவற்றில் பெரும்பாலானவை ரிக்டரில் 5 மற்றும் அதற்கும் அதிகமாகவே இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். தொடர் நிலநடுக்கங்களை அடுத்து டெக்டானிக் தட்டு பகுதிகளில் அமைந்து இருக்கும் துருக்கி நாடு 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்கிறது.

இந்த நிலநடுக்கங்களின் தாக்கம் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் தூரத்திற்கு உணரப்பட்டு இருக்கிறது. துருக்கி நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 46 ஆயிரத்தை கடந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக