வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

கடத்தல் தங்கம்: 17.7 கிலோ பொட்டலங்களை கடலில் வீசிய நபர்கள் - முத்துக்குளித்து மீட்ட ஸ்கூபா டைவர்கள்

 BBC News தமிழ் : இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அருகே நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட ரூ. 10.5 கோடி மதிப்பிலான 17.7 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தங்க கட்டிகளை இலங்கையில் இருந்து கடத்தி வந்த மண்டபத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால் சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திலிருந்து கஞ்சா, ஐஸ் போதை பொருள், சமையல் மஞ்சள், ஏலக்காய், வலி மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.


அதேபோல் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்க கட்டிகள் மன்னார் வளைகுடா கடல் வழியாக வேதாளை, மரைக்காயர்பட்டிணம், மண்டபம் கடற்கரை பகுதிக்கு கடத்தி வரப்படுகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இலங்கையிலிருந்து கடத்தல் தங்கம் நாட்டுப்படகில் மண்டபம் அடுத்துள்ள வேதாளைக்கு கடத்தி வர இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நடுக்கடலில் இந்திய கடலோர காவல் படை ரோந்துப் படகை கண்டதும் நாட்டுப் படகு ஒன்று அங்கிருந்து தப்பிக்க முயன்றது. இதனால் சந்தேகமடைந்த இந்திய படையினர் நாட்டுப் படகை நடுக்கடலில் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது படகில் இருந்தவர்கள் கடலில் ஒரு பார்சலை தூக்கி வீசியுள்ளனர்.

இதையடுத்து அந்த படகில் இருந்த மூவரையும் பிடித்து இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமுக்கு அழைத்து சென்று கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர். அங்கு மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், வேதாளையை சேர்ந்த ஒருவருக்காக இலங்கை நபர்களிடம் இருந்து தங்க கட்டிகள் கொண்ட பார்சலை நடுக்கடலில் வைத்து வாங்கிக் கொண்டு மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் நோக்கி வந்ததாக தெரிய வந்தது.

தங்க கட்டிகள் கொண்ட பார்சலை கடலில் வீசியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று புதன்கிழமை காலை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் தெற்கு மீன் பிடித்து துறைமுகத்தில் ஸ்கூபா டைவர்ஸ் என்று அழைக்கப்படும் சிலிண்டர்களை பயன்படுத்தி கடலுக்கு அடியில் செல்லும் கடல் சாகச வீரர்களை கொண்டு கடலில் வீசிய பார்சலை தேடினர்.

ஆனால் நேற்று காற்றின் வேகம் சற்று உயர்ந்து கடல் சீற்றத்துடன் கடல் நீர் தெளிவில்லாமல் கலக்கமாக இருந்ததால் அவர்களால் தொடர்ந்து தேட முடிய வில்லை இதனால் நேற்று மாலை தற்காலிகமாக தேடும் பணியை நிறுத்தினர்.

இதனிடையே நாட்டுப்படகில் இருந்து கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் கடலில் வீசிய பார்சலை பிரத்யேக வலையை பயன்படுத்தி எடுத்து தருவதாக ஒப்புக்கொண்டார்.

கடலுக்கு அடியில் சென்று வலையை பயன்படுத்தி தங்க கட்டிகள் கொண்ட பார்சலை எடுத்து கடலுக்கு அடியில் வேறொரு இடத்தில் பதுக்கி வைத்து விடுவார்கள் அல்லது வலை போட்டால் அந்த பார்சல் இடம் மாறிவிடும் என்பதால் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

கடலுக்குள் செல்ல முன்வந்த ஸ்கூபா கடற்படை வீரர்கள்

நாட்டுப்படகில் இருந்து கைது செய்யப்பட்ட மூவரையும் மண்டபம் தெற்கு மீன் பிடி துறைமுகம் அருகே நடுக்கடலுக்குள் அழைத்து சென்ற மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பார்சலை கடலில் வீசிய இடத்தை காண்பிக்கச் செய்தனர்.

அங்கு இந்திய கடற்படையை சேர்ந்த பயிற்சி பெற்ற அனுபவிக்க ஸ்கூபா டைவிங் வீரர்களை கொண்டு கடலுக்கு அடியில் இன்று இரண்டாவது நாளாக தீவிரமாக தேடினர்.

இதனையடுத்து இன்று மதியம் 12 மணியளவில் மண்டபம் தெற்கு மீன்பிடிக்க துறைமுகத்திற்கு அருகே கடலுக்கு அடியில் துணியால் மூடப்பட்ட ஒரு பொருள் ஸ்கூபா டைவிங் வீரர்களின் கையில் சிக்கியது. அதை திறந்து பார்க்கும் போது அதில் சின்ன சின்ன பாக்கெட்டுகளாக மடிக்கப்பட்டு 14 பொட்டலங்கள் இருந்தன.

இதையடுத்து அந்த பார்சலை கைப்பற்றி இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான மண்டபம் முகாமுக்கு எடுத்து வந்து அதை முழுமையாக ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் தங்க கட்டிகள், தங்க சங்கிலிகள், இருந்தது. பின்னர் நகை மதிப்பீட்டாளர் அழைத்து அளவிடும் போது அதில் 17.7 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த படகில் இருந்து பிடிபட்ட மண்டபத்தைச் சேர்ந்த நாகூர் கனி, ஷாகுபன் சாதிக் மற்றும் மரைக்காயர்பட்டிணத்தை சேர்ந்த சமீர் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்து நாட்டுப்படகை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

தொடரும் தங்கக்கடத்தல்

இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 142 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 90 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் முறையாக 10.5 கோடி மதிப்பிலான 17.7 கிலோ தங்கம் மண்டபம் கடலில் பிடிபட்டுள்ளது. தங்க கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்களது கடவுச்சீட்டு மற்றும் வங்கி கணக்குகளை முடக்க மத்திய வருவாய் புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

விரைவில் மரைக்காயர்பட்டிணம், வேதாளை, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக