வியாழன், 16 பிப்ரவரி, 2023

அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் மேலும் சிறைவைக்கப்பட்டு இருந்த 12 பெண்கள் உள்பட 25 பேர் மீட்பு

 மாலைமலர் :விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் 'அன்புஜோதி' என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை சேர்ந்த ஜூபின்பேபி தனது மனைவி மரியாவுடன் இணைந்து 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்த ஆதரவற்ற பெண்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த பெண்கள் என சுமார் 150 பேர் தங்கி இருந்துள்ளனர்.
இவர்களில் ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை சிறைவைத்து சங்கிலியால் கட்டிவிட்டு ஆசிரம நிர்வாகியான ஜூபின் பேபி கற்பழித்து விட்டதாக கூறி இருக்கும் குற்றச்சாட்டுக்கு பிறகே ஆசிரமம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.


இந்த ஆசிரமத்தில் இருந்து ஜாபருல்லா என்கிற பெண் மாயமாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆசிரமத்தில் சேர்த்துவிடப்பட்ட ஜாபருல்லா பெங்களூரில் இருப்பதாக ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

ஆனால் பெங்களூரிலும் அவர் இல்லை என்பதும் இவரைப்போல சுமார் 50 பேர் வரையில் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவும் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் புதிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து அன்பு ஜோதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டு நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பமாக இன்னொரு வீடும் சித்ரவதை கூடமாக செயல்பட்டு வந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழகம்-புதுவை எல்லையையொட்டிய பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்ன முதலியார் சாவடியில் அன்பு ஜோதி ஆசிரமத்தின் இன்னொரு கிளை போல இந்த இல்லம் செயல்பட்டு வந்துள்ளது.

இதுபற்றி தகவல் கிடைத்தும் அங்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 12 பெண்கள் உள்பட 25 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரையும் போலீசாருடன் இணைந்து மாவட்ட வருவாய் அதிகாரிகள் மீட்டனர்.

அன்புஜோதி ஆசிரமத்தில் சிறைவைத்து சித்ரவதை செய்யப்பட்டவர்களை போன்றே இந்த வீட்டில் இருந்தவர்களும் சித்ரவதைக்குள்ளானது போன்ற தோற்றத்தில் உடல் மெலிந்து காணப்பட்டனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட 25 பேரும் உடனடியாக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அனைவருக்கும் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து சகல வசதிகளுடன் கூடிய அரசு காப்பகங்களில் ஆதரவற்றோர் அனைவரையும் சேர்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அன்புஜோதி ஆசிரமத்தில் குரங்குகளை ஏவி விட்டு பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டதும், போதை மருந்து கொடுத்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சின்ன முதலியார் சாவடியில் உள்ள வீட்டிலும் அதே போன்று பெண்கள் பாலியல் தொல்லைக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதத்தில் ஆதரவற்ற ஆசிரம பெண்களுக்கும் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.

அன்புஜோதி ஆசிரமம் கடந்த 17 ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமலேயே செயல்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரிகள் மற்றும் சமூகநலத்துறையை சேர்ந்த அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆசிரமத்தில் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டதே அங்கு முறைகேடுகள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் நடைபெற காரணமாக அமைந்துள்ளது.

இதுபற்றி உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளும் அறிவுறுத்தி உள்ளனர். அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடைபெற்றுள்ள அத்துமீறல்கள் தொடர்பாக முதலில் போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது.

இந்த ஆசிரமத்தில் இருந்து மாயமான ஜாபருல்லாவை மீட்டு தரக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டு அதில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தான் அந்த பெண்ணின் உறவினர்கள் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர்.

இதன்பிறகே போலீசார் தலையிட்டு ஜாபருல்லாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக ஆசிரம நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜாபருல்லா பெங்களூர் ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் அங்கும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஜாபருல்லா எங்கே? என்கிற கேள்வி பலமாகவே எழுந்துள்ளது. இவரைப்போல மாயமான 50 பேரும் எங்கிருக்கிறார்கள்? என்பதும் மர்மமாகவே உள்ளது.

இதனால் அடுத்தடுத்து நடத்தப்படும் விசாரணையில் அன்புஜோதி ஆசிரம விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக