ஞாயிறு, 1 ஜனவரி, 2023

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அரசு ஊழியர்கள் அப்செட்..!

 tamil.samayam.com  :  சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறியபடி வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு மீது அரசு ஊழியர், ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., அவர்களுக்கு ஆதரவு அளித்தது.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதை நம்பிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் நடைபெறவில்லை.



பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும், திமுக அரசு மவுனம் காத்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜூலை 1 முதல், நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. பொதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதும், தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், இதுநாள் வரை அறிவிக்கப்படவில்லை.

பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
இவ்வாறு கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அரசு மீது கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதை, சங்க நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறியபடி வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல முறை பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இந்த விவகாரத்தில் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே மாபெரும் அளவில் போராட்டத்தை முன்னெடுக்க அரசு ஊழியர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக