ஞாயிறு, 1 ஜனவரி, 2023

இலங்கை நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான்: தமிழகத்தில் பதுங்கலா?

மின்னம்பலம் - செல்வம் :   இலங்கை நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான்: தமிழகத்தில் பதுங்கலா?
பிரபல நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகமது நஜிம் முகமது இம்ரான் என்ற கஞ்சிபானி இம்ரான் கடந்த வாரம் இலங்கை நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் ராமேஸ்வரத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறை வட்டாரங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி ராமநாதபுரம் கடற்கரையில் இறங்கிய கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடுமாறு தமிழக உளவுத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொலை மற்றும் கிரிமினல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இம்ரான் கடந்த 2019-ஆம் ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இந்தநிலையில் அவர் கடந்த வாரம் இலங்கை நீதிமன்றத்தில் 50 லட்சம் அபராத தொகை செலுத்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவர் ஜாமீனில் வெளியே வந்த பிறகு இந்தியாவிற்குள் நுழைய திட்டமிட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பிடமிருந்து தமிழக உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இம்ரான் கஞ்சிபானி மாறுவேடத்தில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறி தலைமன்னாருக்கு சென்றதாகவும் அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு ஊடுருவுவதற்கான ஏற்பாடுகளை அவரது கூட்டாளிகள் செய்ததாகவும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இம்ரான் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தி இந்து பத்திரிகையிடம் தெரிவிக்கும்போது, “ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹெராயின் மற்றும் கோகோயின் சப்ளையர்களுடன் வலுவான தொடர்பு கொண்டவர் போதைப்பொருள் மன்னன் இம்ரான். இவர் இலங்கையில் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். துபாயில் கடந்த 2019-ல் இலங்கை சிறப்புக் குழு காவல்துறை அவரை கைது செய்தது. அவரது கும்பல் கடல் எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

இம்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றது குறித்து இலங்கையில் இருந்து முறையான தகவல் எதுவும் வெளிவரவில்லை என்றாலும், உளவுத்துறைக்கு நம்பகமான தகவல் கிடைத்திருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் கூறியுள்ளார்.

இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள கமிஷனர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு சந்தேகப்படும் படியான நபர்களை கண்டுபிடித்தால் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில், விடுதலை புலிகள் இயக்கத்திற்குப் புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்களை கடத்த முயன்ற 9 பேரை சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், இம்ரான் கஞ்சிபானி தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக