வெள்ளி, 27 ஜனவரி, 2023

தமிழ்நாடு வாழ்க' .. ஆளுநர் முன்பு அணி வகுத்துச் சென்ற அரசின் சாதனை விளக்க ஊர்திகள்!

 Kalaignar Seithigal  -  Lenin  : தமிழ்நாடு சென்னை மெரினாவில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்தியில் 'தமிழ்நாடு வாழ்க' வாசகம் இடம் பெற்று இருந்தது.
நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
தமிழ்நாட்டில் சென்னை மெரினாவில் தேசியக் கொடியைத் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார்.


முன்னதாக ராணுவ அணிவகுப்புடன் நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் முப்படை அதிகாரிகளை ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். பிறகு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது மற்றும் வேளாண்மைத் துறையின் சிறப்பு விருதுகளை வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற வரும் பள்ளி - கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டு வருகின்றனர். இதையடுத்து தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணி வகுத்துச் சென்றது.

இதில் 'தமிழ்நாடு வாழ்க' என்ற வாசகத்துடன் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலங்கார ஊர்தி சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் மதுரையில் தயாராகி வரும் கலைஞர் நூலகம் குறித்து விளக்கும் ஊர்தியும் , முதலமைச்சரின் புதுமைப்பெண் திட்டத்தை குறிக்கும் வகையிலும், 'போதை இல்லா தமிழ்நாடு' என்ற தலைப்பில் காவல்துறை ஊர்தியும் இடம் பெற்றிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக