புதன், 11 ஜனவரி, 2023

தொடர்கொலைகளின் களம்! ஜக்கியின் ஈஷாவை தடை செய்துஅரசுடமையாக்க வேண்டும்- மக்களின் வேண்டுகோள்

 nakkheeran.in  EXCLUSIVE; ஜக்கியின் அந்த ஏழு நாட்கள்! அரங்கேறும் கொடுமைகள்!
யோகா கற்றுத் தருகிறோம் என்கிற பெயரில் ஜக்கியின் ஈஷா மையத்தில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன.
அதிலும் சைலன்ஸ் ஹவர் நிகழ்ச்சியால் பலரும் இறந்துள்ளனர்.
உண்மையில் சைலன்ஸ் ஹவர் நிகழ்ச்சியில் நடப்பது என்ன?
என ஆராய்ந்தால் அத்தனையும் அதிர்ச்சியே! முதுகுத்தண்டு ஜில்லிட வைக்கும் சைலன்ஸ் ஹவர் குறித்தான டீடெய்ல்ஸ் ரிப்போர்ட் இதோ!
“மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்கள், நீரிழிவு, இருதய நோய் மற்றும் ஒவ்வாமை போன்ற அத்தனை நோய்களையும் குணப்படுத்தவும்,
வாழ்க்கையை எளிதாக வாழ்ந்திடவும் யோகா பயிற்சிகள் எங்களால் வழங்கப்படுகின்றது.
இதனைக் கற்றுக்கொண்டால் அத்தனை நோய்களும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் மனம் அமைதியாகி, சக்தி பெருகி தன்னம்பிக்கை அதிகமாகும் என கவன ஈர்ப்பு விளம்பரங்களால் கல்லாக் கட்டி வருகின்றது ஜக்கியின் ஈஷா யோகா மையம்.
துவக்கத்தில் சாதாரண பயிற்சிகளை வழங்கும் ஜக்கி, பயிற்சிக்கு வருபவர்கள் கைப்பட எழுதிய அப்ளிகேஷனை பில்டர் செய்து, குறிப்பிட்ட நபர்களிடம் மட்டும் பவ ஸ்பந்தனா திட்டத்திற்கு வலை விரிக்கின்றார்.
ஏனெனில் அதில்தான் கட்டணமும் அதிகம்.
ஈஷாவில் பணிபுரிய, சம்பளமில்லாத வேலை ஆள் கிடைக்கும்.
அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவருக்கு குரு என பட்டம் சூட்டப்படும்.
சுமார் 3500 நபர்கள் வரை கலந்துகொள்ளும் இந்த தியானம்தான் மனித உரிமை மீறலின் உச்சம்.
வருடா, வருடம் 900 பேர் வரைதான் கலந்துகொள்வார்கள். ஆனால், இந்த வருடம் உச்சபட்சமாக 3500 பேர் கலந்து கொண்டார்கள்” என்கிறார் ஈஷாவில் வாலண்டியராக பணியாற்றி வெளியேறிய மதுரையைச் சேர்ந்த நபர்  ஒருவர்.

பவ ஸ்பந்தனா திட்டத்தில் சைலன்ஸ் ஹவர், ஷூன்யா தியானம், சக்தி சலன கிரியா, ஸ்வரூபவாரிகா மற்றும் குணமாயா, இறுதியில் ஆராவில் கலத்தல் நிலை உள்ளிட்டவை போதிக்கப்படுவதாக கலந்துகொள்பவர்களிடம் நம்ப வைக்கப்படுகிறது. 

ஆனால் சைலன்ஸ் ஹவர் என்னும் நிகழ்ச்சி மட்டுமே பவ ஸ்பந்தனா திட்டத்தின் ஆணி வேராக இருக்கின்றது என்பது இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட பலரின் கூற்று. சைலன்ஸ் ஹவர் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குறிப்பிட்ட கட்டணத்தை ஈஷா அறக்கட்டளைக்கு முன் கூட்டியே செலுத்தி தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். நன்கொடை எனும் பெயரில் வாங்கப்படும் இந்த பணம் ஈஷா பவுண்டேஷனுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் 40 நாட்களுக்கு மது, முட்டை, பால், உருளைக்கிழங்கு, தயிர் மற்றும் தூக்கம் வரும் பொருட்களை சாப்பிடக்கூடாது. முடிந்தால் எவ்வளவு விழிக்க முடியுமோ அவ்வளவு விழித்து தங்களை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்கின்ற நிபந்தனையும் உண்டு.

EXCLUSIVE; Those seven days of Jaki! Atrocities taking place!

சைலன்ஸ் ஹவர் பயிற்சியை அனுபவித்த சுவாமி அநிருத்தர் என்பவரோ, “செல்போன், கைக்கடிகாரம், கார் சாவி, உடைகள் என நாம் என்ன கொண்டு சென்றாலும் வாசலிலேயே வாங்கி வைத்துக்கொள்வார்கள். 

அதற்கு முன் நமக்கென்று யோகா பயில பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான மூன்று செட் டிரஸ் கொடுப்பார்கள். கூடவே துணி துவைக்க சோப், ஒரு பித்தளை தட்டு, 1 கற்பூரம் தட்டு, 1 தூபம் ஆகிய பித்தளைப் பொருட்களையும் நாம் கண்டிப்பாக வாங்க வேண்டும். அதுவும் நம்முடைய பணத்தில்தான். முதல் நாள் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் ஸ்பந்தனா ஹாலில் அனைவரையும் அமர வைத்து, ஆளுக்கொரு நோட் பேடும், பேனாவையும் கொடுப்பார்கள். 

அதில் நம்மைப் பற்றியும் நமக்கு என்ன பிரச்சனைகள்? நம்முடன் உறவில் இருப்பவர்கள் யார்? என எழுத வேண்டும். பின்னாளில்தான் தெரிந்தது நம்மை ஜக்கி தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடு என்று. அதன்பின் அனைவருக்கும் ஒரு எண் கொடுத்து அதையே நமது கையில் ரிஸ்ட் பேண்டாகக் கட்டிவிடுவார்கள். 

பின் 6க்கு 3 அடி என்கின்ற அளவில் பெட் கொடுத்து நமக்காக தரையில் எழுதப்பட்டிருக்கும் எண்ணில் விரிக்க வைப்பார்கள். அதில்தான் உட்கார, தூங்க எல்லாமே.!!


முதலில் ஆரம்பிப்பது சுக பிராணாயாமம் செய்வது மற்றும் அரை நாள் சூரிய நமஸ்காரம். அதன்பின் மஹாதேவா தியானம் ‘ஹர ஹர மஹா தேவா' எனக் கண்ணை மூடிக் கொண்டு ஓங்கி குரலெழுப்ப வேண்டும். சுற்றியுள்ளவர்களைப் பார்க்க முடியாது. 

கண்ணைத் திறக்கக் கூடாது. அந்த இடத்தில் குரல் கொஞ்சம் கம்மியானால் அங்கிருக்கும் வாலண்டியர்கள் காதில் வந்து கத்தி மீண்டும் குரலெழுப்ப வைப்பார்கள். தொண்டை கிழிய கத்திய பிறகு ஒரு காலை பின்னோக்கித் தூக்கி உடலை மேலும் கீழும் வளைத்து தொடர்ந்து ‘ஹரா' எனக் கத்த வேண்டும். 

இதிலேயே பாதிப் பேருக்கு பைத்தியம் பிடித்துவிடும் நிலைமை. இதனைச் செய்யச் செய்ய கழுத்துப் பிடிப்பு, முதுகு வலி அல்லது தொடைகள் பிடிப்பது என எது வேண்டுமானாலும் நடக்கும். 

2ஆம் நாளில் அங்கே இருக்கும் மைதானத்தில் விளையாட வேண்டும். 100 முறை பந்தை விடாமல் அடித்து உயரத்திலேயே நிறுத்த வேண்டும். இதனால் காலில் அடிபடுவது சகஜமான நிலை என்பதாகிறது. 

முதல் நாள் வலியோடு இந்த துன்பமும் வேறு. அடிபட்டிருந்தாலும் தொடர்ச்சியாக 100 முறை பந்தை அடித்து உயரத்தில் நிறுத்துபவருக்கே காலை உணவு கொடுப்பார்கள். 

மீண்டும் முதல் நாள் பயிற்சி. இடை இடையில் அழுதல், கத்துதல், சிரித்தல் என்கின்ற பயிற்சி வேறு. எனக்கு மன நலக் காப்பகத்தில் இருந்தது போன்ற உணர்வு இருந்தது. 3ஆம் நாள்தான் முக்கியமான ஒன்று.! 

அன்றைய தினத்தில் மீண்டும் நம்மிடம் பேப்பரும், பேனாவும் கொடுக்கப்பட்டு, "உங்களுக்கு நெருக்கமானவர் யாராக இருந்தாலும் அவருக்கு, இந்தக் கடிதத்தை எழுதுகிறீர்கள். 

அந்தக் கடிதத்தில் நீங்கள் எழுதப்போவது, "இன்னும் மூன்று நாட்களில் நாங்கள் செத்து விடுவோம். இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்திற்குச் சென்று விடுவோம். ஆதலால் நான் வரவில்லையென்றாலும் என்னைத் தேடாதீர்கள்” எனக் குறிப்பிட்டு எழுத வைப்பார்கள்.

EXCLUSIVE; Those seven days of Jaki! Atrocities taking place!

அதன்பின் கலந்துகொண்ட ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களை அவர்களது வாயாலேயே கூற வைப்பார்கள். 

அதில், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, பாலியல் வக்கிரங்கள், தாழ்வு மனப்பான்மை, பிறரை ஏமாற்றியது என்பது போன்ற பலவற்றையும் கேட்க வேண்டியிருக்கும். 

அடுத்த 4ம் நாளிலிருந்து தான் கொடூரங்களே ஆரம்பிக்கும். இசையை வைத்து உயிரைக் கொல்ல முடியும், 

இசையை வைத்து நமக்கு வேண்டியதை சாதிக்கலாம் என்பது அங்குதான் எனக்குத் தெரிந்தது. இசை மாறி, மாறி ஒலிக்கும். அழுகையும், கோபமும், கத்தலும் நிறைந்திருக்கும். 

அதன்பின் 5ஆம் நாள் சூன்ய தியானம். எங்களைப் போன்ற பங்கேற்பாளர்களைத் தனித்தனியாகப் பிரித்து பெண் சீடரிடம் அனுப்பி வைப்பார்கள். 

அங்கு எங்களுடைய காதில் ஸ்ரீம், ஹ்ரீம், ரீம் எனப்படும் பீஜ மந்திரம் மட்டும் ஓதப்படும். இடையில், பிரம்மன் ஒருவரே எனவும் போதிக்கப்படுகின்றது. 

அடுத்த 6ஆம் நாள் சைலன்ஸ் ஹவர் தனியறைக்குள் அனுப்பப்பட்ட நாங்கள் ஒருவரையொருவர் பார்க்க முடியாது. 

இருட்டிய அறைக்குள், கண் கட்டப்பட்டிருக்கும். 

நாங்கள் தூங்கக்கூடாது. ஹரா என மனதினுள் உச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். 

ஒரு கட்டத்தில் தூங்க முயற்சித்தால் காதில் மெல்ல ஹரா என கிசுகிசுப்பார்கள். 

அன்றைய தினம் மட்டும் எங்களைத் தூங்கவிடுவது ஒருமணி நேரம் மட்டுமே. சாப்பாடு, தண்ணி கிடையாது. அதன்பின் உன்னுடைய ஆராவில் நான் கலந்துவிட்டேன் என்பார் ஜக்கி. 

அப்பொழுது முதல்நாள் எழுதிய சீட்டைக் காண்பித்து "இதனை எரித்துவிடுங்கள். இனி உங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தும் இறைவனிடம் கலந்துவிட்டது” என அதனை எரிக்க வைப்பார். 

அடுத்த 7ஆம் நாளில் எங்களில் ஒருவரை குருவாக தேர்ந்தெடுத்து அவருக்கு நாங்கள் அனைவரும் வணக்கம் சொல்ல வேண்டும். சொந்தக் காசிலேயே சூனியம் வைப்பது எப்படி எனத் தெரிய வேண்டுமானால் ஜக்கியை நாடுங்கள். 

இத்தனை சித்ரவதைகளையும் தாங்கினால் எப்படி மன அழுத்தம் போகும்? தற்கொலைகளும், கொலைகளும்தான் அதிகரிக்கும்” என்கிறார் அவர்.

யோகா கற்றுக் கொடுப்பதற்கு இந்தியாவில் தடையேதுமில்லை. ஆனால் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு, பல உயிர்ப்பலிகளுக்கு காரணமாயிருக்கும் ஜக்கியின் ஈஷா யோகா மையப் பயிற்சிகளை தடை செய்து, ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டுமென்பது பொதுமக்களின் வேண்டுகோள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக