செவ்வாய், 17 ஜனவரி, 2023

மதுரை தொகுதி தயாநிதி அழகிரிக்கு? தினமலர் சந்தேகம்

தினமலர்  :  மதுரை: 'வரும் லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியை கூட்டணிக்கு தாரைவார்த்துவிடாமல் தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்' என தி.மு.க., நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
லோக்சபா தேர்தலையொட்டி தமிழக அரசியல் களத்தில் தற்போதே 'தேர்தல் ஜூரம்' பற்றிக்கொண்டுள்ளது. பிரதான கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் எந்த கட்சிகள் கூட்டணி வைக்கும்; எந்த கட்சிகள் வெளியேறும் என்ற 'அரசியல் கணக்கு' ஆரம்பித்து விட்டது.
இதில் தென் மாவட்டங்களின் வி.ஐ.பி., தொகுதியான மதுரையை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும். இத்தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., கம்யூ., காங்., கட்சிகள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும் முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி 2009ல் வெற்றி பெற்றதால் 'மத்திய அமைச்சர்' அந்தஸ்தை இத்தொகுதி பெற்றது.


பின் கட்சியில் இருந்து அழகிரி விலக்கப்பட்ட பின் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. 2019 தேர்தலில் தி.மு.க., நிர்வாகிகள் பலர் தொகுதியை குறிவைத்திருந்த நிலையில் கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூ.,க்கு ஸ்டாலின் ஒதுக்கினார்.

'ஸ்டாலின் உத்தரவை பின்பற்ற வேண்டுமே' என்ற இக்கட்டான சூழலில் கம்யூனிஸ்ட் வெற்றிக்கு தி.மு.க., பக்கபலமாக நின்றது.

வெற்றி பெற்ற வெங்கடேசன் எம்.பி., அடிப்படை வசதி, புதிய திட்டங்களை கேட்டு பெறும் பணியில் கவனம் செலுத்துவதைவிட தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தான் அதிகநேரம் செலவிடுகிறார். தன்னை தேசிய அரசியல்வாதியாக அடையாளப்படுத்திக்கொள்வதில் முழு மூச்சாக உள்ளார். இதனால் அவரை தேர்ந்தெடுத்த தி.மு.க.,வினர் நொந்து போய் உள்ளனர்.

கைவிட்டு போன துணைமேயர் பதவி
மாவட்ட செயலாளர் தளபதிக்கும், அமைச்சர் தியாகராஜனுக்கும் இடையே நிலவும் 'முட்டல் மோதல்களை' பயன்படுத்தி வெங்கடேசன் காய் நகர்த்தி தனது கட்சி கவுன்சிலரான நாகராஜனுக்கு 'துணை மேயர்' பதவி பெற்று தந்து விட்டார்.

ஏற்கனவே எம்.பி., வாய்ப்பு பறிபோனதால் உஷ்ணத்தில் இருந்த தி.மு.க.,வினர், மாநகராட்சி துணை மேயர் பதவியும் கம்யூ.,க்கு சென்றதால் கடும் அதிருப்தியாயினர்.
வரும் லோக்சபா தேர்தலை அதற்கான நேரமாக பயன்படுத்தி மதுரையை 'மீண்டும் கூட்டணிக்கு தாரைவார்க்க வேண்டாம்' என்ற கோஷத்தை கட்சி தலைமைக்கு வலுவாக முன்வைக்க திட்டமிட்டுள்ளனர். தி.மு.க., தலைமையும் கட்சியினர் உணர்வை புரிந்துகொண்டு மதுரையை தி.மு.க., வி.ஐ.பி., வேட்பாளருக்கு ஒதுக்கும் ஆலோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டு வங்கி கிடையாது
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: இத்தொகுதியில் கம்யூ.,க்கு என ஓட்டு வங்கி ஏதும் இல்லை. மாவட்டத்தில் அவர்களுக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லை. அக்கட்சியை வளர்த்த பழைய கம்யூ., தலைவர்கள் பெயர்களை கூறிக் கொண்டு 'கூட்டணி குதிரையில்' சவாரி செய்து வெற்றி பெறுகின்றனர். இரண்டு முறை மோகன் எம்.பி.,யாக இருந்தார். ஆனால் அவர் மதுரைக்கு கொண்டுவந்த திட்டங்களை அக்கட்சியினர் கூற முடியுமா.

ஆனால் அழகிரி மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், தத்தனேரி அருள்தாஸ்புரம் பாலம் பணியை விரைவுபடுத்தியது, சவாலாக இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டை நகருக்கு வெளியே கொண்டு சென்றது. மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பேவர் பிளாக் பதித்தது, மதுரையில் அண்ணா பல்கலை கிளை கொண்டு வந்தது, நெல் மண்டியை நகருக்கு வெளியே கொண்டு சென்றது, பெரியார், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் பாலங்கள் என பல்வேறு திட்டங்கள் நடந்தன.

வெங்கடேசன் எம்.பி.,யாகி நான்கு ஆண்டுகளில் ஒரு திட்டத்தையாவது மதுரைக்கு கொண்டுவந்தாரா. எம்.பி., நிதியை மட்டுமே செலவிட்டுள்ளார். இந்த இடத்தில் தி.மு.க., எம்.பி., இருந்திருந்தால் வளர்ச்சி திட்டங்களாவது கிடைத்திருக்கும். எனவே வரும் லோக்சபா தேர்தலில் மதுரையில் தி.மு.க.,வே களம் இறங்க வேண்டும். அதை தான் மக்களும் விரும்புகின்றனர் என்றனர்.

அழகிரி மகனுக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களில் தி.மு.க., வெற்றிக்கு பல நேரங்களில் கை கொடுத்தவர் அழகிரி. வைகோ கட்சியை விட்டு வெளியேறிய நேரத்தில் தென் மாவட்டங்களில் தி.மு.க., மாவட்ட செயலாளர்களை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். பல்வேறு இடைத்தேர்தல்களில் வெற்றியை பெற்றுத் தந்தார். தேசிய கட்சிகள் வலை விரித்தாலும் மறுத்து விட்டு, தி.மு.க., மீதே விசுவாசமாக உள்ளார். ஸ்டாலின் மகன் உதயநிதி அமைச்சரான பிறகும் அமைதி காத்து வருகிறார்.உதயநிதி பதவியேற்பு நிகழ்ச்சியில் அழகிரி மகன் தயாநிதி கலந்து கொண்டார். இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உள்ளது.எனவே மதுரை தொகுதியில் தயாநிதிக்கு சீட் வழங்கப்படலாம் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக