செவ்வாய், 3 ஜனவரி, 2023

உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

தினமலர் : கீவ் : உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்றுடன் 313-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர். ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மெகிவ்கா நகரில் ரஷ்ய வீரர்களின் தற்காலிக ராணுவ தளத்தில் உக்ரைன் ராணுவ தாக்குதல் நடத்தியது.

ஹிம்ரஸ் ராக்கெட் ஏவு அமைப்பில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் தாக்குதலில் 63 ரஷிய வீரர்கள் உயிரிழந்தனர். ஹிம்ரஸ் ராக்கெட் ஏவு அமைப்பில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 2 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, மெகிவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 400 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 300 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிம்ரஸ் ராக்கெட் ஏவு அமைப்பு மூலம் உக்ரைன் இந்த ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக