செவ்வாய், 31 ஜனவரி, 2023

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - குறைந்தது 32 பேர் உயிரிழப்பு

 bbc.com  : பாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 32 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மசூதியில் தொழுகையாளர்கள் நிரம்பியிருந்தபோது நடந்த இந்த குண்டுவெடிப்பில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி தகர்ந்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே மக்கள் சிக்கியிருப்பதாகவும், சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குண்டுவெடிப்பிற்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்பதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


காயமடைந்தவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக லேடி ரீடிங் மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் முகமது அசிம் தெரிவித்தார்.

அவசர நிலையை அறிவித்துள்ள லேடி ரீடிங் மருத்துவமனை பிபிசியிடம் பேசுகையில், குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துவரப்படுவதாகத் தெரிவித்தது.

இறந்தவர்களில் பெரும்பாலோர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். அவர்களே இந்தத் தாக்குதலின் இலக்கு என நம்பப்படுகிறது.

பெஷாவர் தலைநகர் நகர போலீஸ் அதிகாரி முகமது இஜாஸ் கான், உள்ளூர் ஊடகத்திடம் பேசுகையில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது அந்தப் பகுதியில் 300 முதல் 400 காவல்துறை அதிகாரிகள் இருந்ததாகத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய குழுக்களில் பாகிஸ்தான் தாலிபன்களும் அடங்கும். கடந்த நவம்பரில் போர் நிறுத்தத்தை அவர்கள் திரும்பப் பெற்றது முதல், வன்முறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

கடந்த மார்ச் மாதம் பெஷாவரில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அந்தத் தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அந்நகர காவல்துறை உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைநகரின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக