செவ்வாய், 10 ஜனவரி, 2023

பாகிஸ்தான் நிதி நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் .. அந்நிய செலாவணி கையிருப்பு 3 மாதம் மட்டுமே உள்ளது..!

tamil.goodreturns.in  -  Prasanna Venkatesh  :  இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது மட்டும் அல்லாமல் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம், மக்கள் என அனைத்தும் இக்கட்டான சூழ்நிலையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தகவல் படி அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
பாகிஸ்தான் அரசும், மத்திய வங்கியும் அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் அதிகளவில் மேற்கொண்டு வரும் நிலையிலும் மோசமான இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தானின் (SBP) அந்நிய செலாவணி கையிருப்பு டிசம்பர் 2022 இல் முடிவடைந்த கடைசி வாரத்தில் 5.576 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. ஜனவரி 2022 இல் இதன் அளவு 16.6 பில்லியன் டாலராக இருந்தது.

அந்நிய செலாவணி கையிருப்பு
அதாவது 2022 ஆம் அண்டில் மட்டும் பாகிஸ்தான் அந்நிய செலாவணி கையிருப்பு 11 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இதில் 245 மில்லியன் டாலர் அளவிலான தொகை கடனுக்கான பேமெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் பத்திரிக்கையான டான் தெரிவித்துள்ளது.

கடன்
பாகிஸ்தான் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து சரிந்து வருவது மூலம் இனி வரும் காலக்கட்டத்தில் அந்நாடு நட்பு ரீதியாக வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசுக்கு புதிய நெருக்கடி உருவாக உள்ளது.

கச்சா எண்ணெய், எரிவாயு
இந்தியாவை போல் பாகிஸ்தான் நாடும் கச்சா எண்ணெய், எரிவாயு, பல உணவ பொருட்களை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறது. ஏற்கனவே மின்சார தட்டுப்பாடு காரணமாக 8 மணிக்குள் அனைத்து கடைகளையும், மால்களையும் மூட உத்தரவிட்டு உள்ளது பாகிஸ்தான் அரசு.

ரயில் போக்குவரத்து
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக மின்சார தட்டுப்பாடு மட்டும் அல்லாமல் ரயில் போக்குவரத்து சேவைகளையும் பாகிஸ்தான் டிசம்பர் மாதம் முதல் நிறுத்தியுள்ளது. குறிப்பாக சரக்கு போக்குவரத்தை நிறுத்தியுள்ளது.

3 வார இறக்குமதி
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு வெறும் 3 வார இறக்குமதிக்கு மட்டுமே போதுமான நிலையில் உள்ளது. இதனால் 3 வாரத்திற்கு பின்பு பாகிஸ்தான் என்ன செய்யப்போகிறது..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

IMF அமைப்பு பதில்
பாகிஸ்தான் அரசு IMF அமைப்பிடம் தனது கடன திட்டத்தின் கீழ் அடுத்த கடன் தவணையை விடுவிக்க கோரி பல முறை பேச்சுவார்த்தை நடந்தியும் பலன் அளிக்காமல் உள்ளது. இதற்கிடையில், நட்பு நாடுகளின் உதவியுடன் பாகிஸ்தான் சரிவில் இருந்து மீண்டு வரும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் இஷாக் தார் நம்பிக்கை தெரிவித்தார், ஆனால் அதற்கான சிக்னல் இன்னும் வரவில்லை.
சீனா, சவுதி அரேபியா
ஏற்கனவே சீனாவிடம் இருந்து கழுத்து வரையில் கடன் வாங்கியிருக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு கைகொடுக்க யாருமே இல்லாத நிலை உள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தான் நாட்டிற்கு சவுதி பெரிய அளவில் உதவிய நிலையில் மீண்டும் உதவுமா..?

English summary
Pakistan forex left only for 3 weeks of imports; People Suffers with new rules


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக