சனி, 28 ஜனவரி, 2023

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வீடுகளில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க தடை

 மாலைமலர் :  திருவனந்தபுரம்: நாய்களை கண்டால் சிலருக்கு பயம்.
ஆனால் சிலருக்கோ அது உற்சாகம்.
அவர்கள் தங்கள் வீடுகளில் எண்ணற்ற நாய்களை வளர்த்து வருவதும் உண்டு. சாதாரண வீடுகள் மட்டுமின்றி அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பலர் நாய்களை வளர்த்து வருகின்றனர்.
அவர்களுக்கு அது ஆனந்தமாக இருந்தாலும் பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் தொல்லையாக கருதுகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய்களால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பாதிப்பு ஏற்படுவதாக கூறி இருப்பது தான் பிரச்சினையாகி உள்ளது.
இதுதொடர்பாக திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு அவர்கள் புகார்களும் அனுப்பினர்.


இதனையடுத்து ஒரு வீட்டில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க தடை விதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கூடுதலாக நாய்களை வளர்க்க வேண்டும் என்றால், ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியாக பணம் கட்டி லைசென்சு பெற வேண்டும் என கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளது.

ஆண்டுக்கு ரூ.ஆயிரம், ரூ.750, ரூ.500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தபிறகு இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என்று திருவனந்தபுரம் மாநகராட்சியின் சுகாதார நிலைக்குழு தலைவர் ஜமீலா ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக