புதன், 28 டிசம்பர், 2022

சொத்துக்கணக்கை காட்ட மறுக்கும் மலையக தலைவர்கள் .. இலங்கை தேர்தல் ஆணையம் கோரிக்கை

tamilmirror.lk - பா.நிரோஸ்:  திகாம்பரம், ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு?
நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான்,  இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் ​தெரிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பம் ஒன்றுக்கு, நுவரெலியா மாவட்ட ​உதவித் தேர்தல் ஆணையாளர் கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய கையெழுத்திட்டு 25.10.2022 என திகதி குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், வே.இராதாகிருஸ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அமரர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் ஆகியோரது சொத்து விவரங்கள், கல்வி தகமைகள் உள்ளிட்டத் தகவல்களை வழங்கக் கோரி 02.10.2022 அன்று நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது.

வழங்கப்பட்ட பதில் கடிதத்தில், அமரர் ஆறுமுகன் தொண்டமான் 1994, 2001, 2004, 2010, 2015ஆம் ஆண்டுகளில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். முத்துசிவலிங்கம் 1994, 2001, 2004, 2010, 2015 ஆம் ஆண்டுகளில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். பழனி திகாம்பரம் 2004, 2010, 2015, 2020ஆம் ஆண்டுகளிலும், வே.இராதாகிருஷ்ணன் 1999, 2004, 2009, 2015, 2020ஆம் ஆண்டுகளிலும், மயில்வாகனம் திலகராஜ் 2015ஆம் ஆண்டும், ஜீவன் தொண்டமான் 2020ஆம் ஆண்டும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளின் கல்வித் தகவல்கள் வேட்புமனுக்களில் சேர்க்கப்படாததால் ''தேர்தல் ​ஆணையகத்திடம் அரசியல்வாதிகளின் கல்வி தகவல்கள் இல்லை'' எனவும் பதில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் “RTI விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள “சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்” தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும். எனவே சொத்துகள் மற்றும் பொறுப்புகளை வழங்குவதற்கு அவர்களின் அனுமதி எதிர்காலத்தில் கோரப்பட்டு, அனுமதி கிடைத்தால் மாத்திரமே அந்தத் தகவல்கள் வழங்கப்படும்” எனவும் ​தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவலறியும் உரிமைச் சட்டத்தின் 3(1) 5ஆம் பிரிவின்படி இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரும் ஒரு பகிரங்க அதிகாரசபையின் உடமையில், கட்டுப்பாட்டில், உள்ள தவல்களை பெற்றுக்கொள்வதற்கான உரிமை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உதவித் தேர்தல் ஆணையாளர் கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய வழங்கிய தவல்களில் திருப்தி இல்லை என்பதால் இது தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேன்முறையீட்டுக்கு 14.11.2022 என திகதி குறிப்பிடப்பட்டு சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், “நீங்கள் கோரியிருக்கும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை சம்மந்தப்பட்ட நபர்களின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களின் அனுமதி கோரப்பட்டது.

இதன்படி, சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க சம்மந்தப்பட்டவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். எனவே, சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே தகவல்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்க முடியும். ஆனால் இதனை எதனையும் குறிப்பிடாமல் தகவல்களை வழங்குவதற்கு நுவரெலியா மாவட்ட தேர்தல் ஆலுவலகம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், எம்.கே சமன் ஶ்ரீ ரத்நாயக்கவுக்கு 28.11.2022 அன்று மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள​போதிலும் இதுவரையில் பதில் கிடைக்கவில்லை என்பதால் தகவலறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக