திங்கள், 19 டிசம்பர், 2022

அதிகரிக்கும் வட இந்தியர்கள்! அகதிகளாகும் தமிழர்கள்!

aramonline.in  ;  தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலைக்கு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது! பல்லாயிரக்கணக்கில் வட இந்திய பெண்களுக்கு வேலை! பெரும் திரளாக வருவோருக்கு வேலையும், இருப்பிடமும் தந்து, இருப்போரை சொந்த மண்ணில் அகதிகளாக்குவதா?
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலம் ஒன்றியம் வன்னியபுரம் கிராமம் அருகே டாடா எலக்ரானிக்ஸ் எனப்படும் போன் உதரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று 5,300 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த ஆலை செயல்படுவதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கார்ப்பரேஷன் எனப்படும் டிட்கோ 500 ஏக்கர் நிலத்தை தந்துள்ளது. இங்கு சீனாவில் இருந்து வெறியேறிய ஆப்பிள் நிறுவனத்திற்கான போன் உதிரிபாகங்களை தயாரிக்க சுமார் 18,000 பேருக்கான வேலை வாய்ப்பு கொண்ட நிறுவனமாக இது உள்ளது.


சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய இந்த தொழிற்சாலைக்கு இவ்வளவு நிலங்களை கொடுத்த நிலையில், இந்த ஆலையில் பணிபுரிய சுற்றுவட்டார மக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது தான் கவலையளிக்கிறது. இத்தனைக்கும் இதில் வேலை செய்வதற்கான கல்வித் தகுதி ப்ள்ஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ என்ற நிலையில் இந்தப் படிப்பை முடித்த பலர் இந்த மாவட்டத்திலும், பக்கத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் காத்திருக்க, பெரும்பாலான வேலை வட இந்தியர்களை இறக்குமதி செய்து வேலை தரப்படுகிறது.
டாடா மின்னணு தொழிற்சாலையின் ஒரு பகுதி தோற்றம்

அதுவும் இதில் பெண்களுக்கு மட்டுமே 90 சதவிகித வேலை தரப்படுவதாகச் சொல்லி ஜார்கண்ட் போன்ற வட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் இளம்பெண்கள் 15,000 முதல் 20,000 வரை ஆறு மாதப் பயிற்சி தந்து இங்கு அழைத்து வந்து கொண்டுள்ளனர். ஏன் தமிழகத்தில் ஆரம்பிக்கப்படும் ஒரு தொழிற்சாலைக்கு தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கபடுகிறது என்பது புரிபடவே இல்லை. உண்மையிலேயே சுற்றுவட்டார மக்கள் இதனால் கொந்தளித்து போய் உள்ளனர்!

தற்போதைய நிலையில் அங்கு 10,000 பேர் வேலை பார்க்கின்றனர். இதற்காக படிப்படியாக வட இந்தியப் பழங்குடி பெண்களை இறக்குமதி செய்த வண்ணம் உள்ளனர். செப்டம்பர் மாதம் மட்டுமே 5,000 வட இந்தியப் பெண்கள் கொண்டுவரப்பட்டனர்..அக்டோபரில் மேலும் 860 ஜார்கண்ட் மாநிலப் பெண்களை கொண்டு வந்தனர். மேற்கொண்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் 45,000 பேருக்கு வேலை வாய்ப்பு இங்கு தரப்பட உள்ளதாகத் தெரிகிறது! இதற்காக வட இந்தியாவில் பல்லாயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறதாம். அவர்களும் வரவுள்ளனர். இவர்களை தங்க வைக்க ஏராளமான குடியிருப்புகளை உருவாக்கும் வண்ணம் விவசாய நிலங்களை வலிந்து பறிக்கிறார்கள்!

இது ஏதோ திட்டமிட்ட வடவர் குடியேற்ற திணிப்பாகத் தான் தெரிகிறது! வரலாற்றில் போர் காலங்களில் தான் வெற்றி பெற்ற மன்னர்கள் தோல்வி கண்ட நாடுகளில் இவ்விதம் குடியேற்றம் செய்வர். ஆனால், தற்போது ஜனநாயகச் சூழலிலேயே இவ்விதம் நடப்பது தான் வியப்பாக உள்ளது.

தமிழகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது குறித்து ஊடகங்களுக்கு தந்துள்ள விளக்கத்தில், ஓசூர் டாடா தொழிற்சாலையில் தமிழகத்தை சேர்ந்த 1,993 பேருக்கு வேலை தந்துள்ளதாகத் தெரிவித்து உள்ளார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டுமே முன்னூற்று சொச்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பொதுவாக ஒரு தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைகிறதோ, அந்த மண்ணின் மக்களுக்கு கட்டாயம் 80 சதவிகித வேலைகளை தர வேண்டும் என்பது சட்டபூர்வமாகவும், மரபாகவும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இது தலைகீழாக அமல்படுத்தப்படுகிறது.

இந்த அநீதியை எதிர்த்து தமிழ்தேச பேரியக்கம் ஒரு அறப்போராட்டம் டிசம்பர் 9 அன்று அறிவித்து இருந்தது!
தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவதை எதிர்த்து போராட்டம்!

இந்த அறவழி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது!  டாட்டா நிறுவனம் அமைத்துள்ள வன்னிய புரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் கூத்தனபள்ளி கிராமத்தின் ஆஞ்சநேயர் கோயில் அருகே அறப்போராட்டம் நடத்த திட்டபிடப்பட்டது. இந்தப் போராட்டம் தாங்கள் புறக்கணிக்கபடுவதை எதிர்த்து ஜனநாயக வழியில் காட்டப்படும் ஒரு அடையாள எதிர்ப்பு தானே அன்றி வேறல்ல. ஆனால், இதில் கலந்து கொள்ளும் தமிழ் தேசிய அமைப்பாளர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே புறப்படுவதற்கு முன்பு கைது செய்ததது திமுக அரசின் காவல்துறை! இந்த அளவுக்கு ஒன்றிய பாஜக அரசுக்கு திமுக அரசு ஏன் விசுவாசம் காட்ட வேண்டும் என்பதும் தெரியவில்லை. என்ற போதிலும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தினர் திரளாக வந்தனர். அவர்களோடு இதில் நாம் தமிழர், புதிய தலைமுறை மக்கள் கட்சி, தமிழர் வணிக சங்கம் போன்ற பல அமைப்புகளும் கலந்து கொண்டன

இது போன்று பல போராட்டங்களில் நாம் கலந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த போராட்டத்தில் கிருஷ்ணகிரியின் மண்ணின் மைந்தர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் தேசிய பேரியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து மணியரசன்,  கி வெங்கட்ராமன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் பல கிராமங்களில் காவல் துறையினரின் கெடுபிடிகளை தாண்டி மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கைதானார்கள்!
துண்டறிக்கை விநியோகமும், போஸ்டர்களும்!

இந்த போராட்டத்தில் முக்கியமாக கிராமத்தினர்கள் மத்தியில் டாட்டாவின் இந்த செயல் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக காண முடிந்தது! துண்டறிக்கை பெற்றவர்கள் உடனே வாசித்தார்கள்! துண்டறிக்கை கிடைக்கப்பெறாதவர்கள்  ஆங்காங்கே கடைகளில், தெரு ஓரங்களில் நின்று கொண்டு நின்று கொண்டு முழக்கங்களையும், அறவழிப் பேச்சுகளையும் கவனமாக கேட்டுக் கொண்டனர்

#  மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறேன் என்று கூறி நிலமும் மின்சாரமும் குடிநீர் என அனைத்தையும் பெற்றுக் கொண்டு மண்ணின் மைந்தர்களை பணிக்கு அமர்த்தாமல் வடவரை அமர்த்துவதனால் சொந்த மண்ணில் மக்கள் வேலை வாய்ப்பு பறிபோகிறது

# சொந்த மண்ணில் வேலை வாய்ப்பு இல்லாமல் இந்த மக்கள் இந்த மண்ணை விட்டு வேலை வாய்ப்புக்காக வேறு நிலத்திற்கு போகும் பொழுது சொந்த மண்ணை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆகிறார்கள் இது ஆரம்ப நிலையில் தடுக்கப்பட வேண்டிய ஒன்று.

#  இந்திய ஒன்றிய தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தில்லியில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் ஆறாயிரம் ஜார்கண்ட் பழங்குடி பெண்களுக்கு ராஞ்சி, ஆசாரிப்பாக்கிலும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாக கூறினார் அவர்களின் சொந்த மண்ணை விட்டு அகதிகளாக ஆக்குகிறார்கள் அவர்கள் இங்கு வரும்பொழுது ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே வருவார்கள் பின்பு கணவர் அல்லது தாய் தகப்பன் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து குடியமர்த்துவார்கள். இது இன்னும் பல லட்சம் வட இந்தியர்கள் தமிழ் மண்ணில் குடியேற வழிவகை செய்யும்.  இது இந்த மண்ணின் மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசு, மாநில அரசு, டாடா நிறுவனம் ஆகியோர் செய்யும் மிகப்பெரும் அநீதியாகும்.

# வல்லரசாகிய சீனாவில் மின்னணுக் கழிவுகளை அகற்ற முடியாமல் சுற்றுப் புறத்தை சீர்குலைவு செய்து அதை கொட்டுவதற்கும் அகற்றவும் வழி இல்லாமல் திண்டாடி வருகிறது! ஆகவே அங்கு நடைபெற்ற அந்த தொழிலை தமிழக மண்ணில் நடத்தி மண்ணை மலடாக்கும் செயலை ஒன்றிய பாஜக அரசு, மாநில திமுக அரசு, டாடா நிறுவனம் ஆகியோர் இணைந்து செய்வது இந்த மண்ணின் மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் ஆகும்.

# திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த மண்ணின் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்கள்! ஆனால், அதற்கு நேர்மாறாக தற்போது செயல்படுவது வேதனையானது.
மண்ணின் மைந்தர்களுக்கு மறுக்கபடும் வேலை வாய்ப்புகள் குறித்து, வாய் திறக்க மறுக்கும் ஸ்டாலின்

# இந்திய அரசின் தொலைத் தொடர்புத் தறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தில்லியில் அரசு விழாவில் பேசியபோது, “ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியிலும், அசாரிபாக்கிலும் ஓசூர் டாட்டா நிறுவன வேலைகளுக்காக ஆறாயிரம் பழங்குடிப் பெண்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்; அவர்கள் விரைவில் தமிழ் நாட்டில் வேலையில் சேர்வார்கள்” என்று கூறியுள்ளார் என்பது கவனத்திற்குரியதாகும்..

இந்த அறப்போராட்டத்தில் பேசிய பெ.மணியரசன் மற்றும் கி.வெங்கட்ராமன் ஆகியோர்களின் பேச்சு மிக எழுச்சி கொண்டதாக இருந்தது! அவற்றின் சாரம்சம் கீழே தரப்பட்டு உள்ளது.

அன்னையின் மடியிலேயே பிள்ளைகளை அனாதைகள் ஆக்கும் இந்த அநீதிக்கு முன்பிருந்த அதிமுக, இன்றுள்ள திமுக ஆட்சிகள் தொடர்ந்து துணை நிற்கின்றன. இப்போதுள்ள மு.க.ஸ்டாலின் அரசு, வட இந்தியர்களைப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

இப்போது தமிழ்நாட்டில் உள்ள, இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், திட்டம் போட்டு  வட இந்தியர்களையே 90 விழுக்காடு வரை வேலையில் சோ்க்கிறது பாஜக அரசு. தொடா்வண்டித் துறை, அஞ்சல்துறை, இந்திய அரசு வங்கிகள், வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகங்கள், வானூா்தி நிலையங்கள், துறைமுகங்கள், ஆவடி -திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகள், பிஎச்இஎல், நெய்வேலி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையம், கணக்குத் தணிக்கை அலுவலகம் உள்ளிட்ட அனைத்திலும் இந்திக்காரா்களுக்கே வேலை! மண்ணின் மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வேலைகளுக்கான தோ்வுகள் அனைத்திலும் மோசடி வேலைகளைச் செய்து  வடஇந்தியர்களையே தேர்ச்சி பெறச் செய்கிறார்கள். இது தமிழகத்தின் அரசியல் களத்திற்கே ஆபத்தானதாகும்! என்றனர்.

கட்டுரையாளர்; கோபாலகிருஷ்ணன்
அரசியல் செயற்பாட்டாளர்,
சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்,
கோயம்பத்தூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக