புதன், 14 டிசம்பர், 2022

உதயநிதி ஸ்டாலின் எனும் நான்'... அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்!

 Kalaignar Seithigal  - Lenin  : தமிழ்நாடு . தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக இன்று பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதோடு கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹைலைட்டே 'ஒற்றை செங்கல்' புரட்சிதான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அவரின் 'ஒற்றை செங்கல்' புரட்சிதான் பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்றை பெற்றது.


பின்னர் தி.மு.க சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் பெற்றி பெற்றார். இதையடுத்து தனது தொகுதியில் மக்கள் தேவைகளை பார்த்துப் பார்த்து நிறைவேற்றி வருகிறார்.

மேலும் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தனது தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 கோடி கல்வி உதவித் தொகை , 800 புதிய மின் இணைப்பு: இலவச வைஃபை, மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா நடைபாதை என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என பொதுமக்களும், தி.மு.க தொண்டர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ரகசியகாப்பும், பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேடையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாற்றுக் கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக