செவ்வாய், 13 டிசம்பர், 2022

பாரதி ,விவேகானந்தர் காந்தி மீது பார்ப்பனியம் கட்டமைத்திருக்கிற புனித பிம்பம் .

May be an image of 10 people and people standing

Meena Somu :  தமிழகமெங்கும் பௌத்த, சமண சிலைகள் கிடைக்கின்றன. சங்க காலத்திலும் சங்க காலத்திற்கு முன்பும் தமிழர்களுக்கு மதம் இருந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. சங்க கால தமிழன் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை போற்றியிருக்கிறான்.
ஆனால் சங்கம் மறுவிய காலத்தில், பெரும்பாலான இலக்கிய நூல்கள் பௌத்த நூல்களாகவும் சமண நூல்களாகவும் உள்ளன.
ஆனால் இன்றைய தமிழனுக்கு... வைதீக- சைவ- பார்ப்பன தெய்வங்களும் இந்துமதமும் தன்னுடைய மதமாகவும், பௌத்த சமண மதங்களும் அது போதிக்கும் நெறிகள் அன்னியமாகவும் இருப்பதற்கான காரணம் என்ன ?
பார்ப்பனியம், எல்லாவற்றையும் தன்வயப்படுத்தி( assimilated) கபகளீகரம் செய்து உருமாறி நிற்கும். பார்ப்பனியம் குறித்த எச்சரிக்கை இல்லாத அரசியல், பண்பாடு, பொருளாதாரம் எதுவுமே சமத்துவத்திற்கானதல்ல.


பார்ப்பனியம் குறித்த சுரணை வரவேண்டும் எனில் நம்மிடம் இருக்கும் பார்ப்பனிய கூறுகள் குறித்தே நாம் சுயவிமர்சனம் செய்து அவற்றை நம் வாழ்வியலில் இருந்து விலக்குவது தான் சமத்துவத்திற்கான முயற்சியாக இருக்கும்.
அதனால் தேசிய கவி பாரதிக்கு பார்ப்பனிய மனநிலை இருந்ததை விமர்சிப்பதில் தவறேதும் இல்லை. பாரதியின் கவிதைகளை சிலாகித்து கல்லூரி நாளில் எனது அறையில் போஸ்டராக வைத்திருந்த போது எனக்கு  இருந்த மனநிலையே இப்போதும் இருக்குமா ?
அப்படி இருந்தால் எந்த கொள்கை அடிப்படையிலும் பகுத்தறிவின் அடிப்படையிலும் அறிவியலின் அடிப்படையிலும் சரியானதாக இருக்காது.
பாரதியார் அவரது காலத்திற்கான புரட்சி கவிஞராக இருக்கலாம்.
ஆனால் பாரதியாருக்கு கிடைத்த புகழ் என்பது பார்ப்பனியத்தால் தான் கிடைத்தது.
அவருடைய காலகட்டத்தில் பண்டித அயோத்திதாசர் போன்ற சிந்தனையாளருக்கு பத்திரிக்கை நடத்தியவர்களுக்கு கிடைக்காத புகழ், பாரதியாருக்கு கிடைத்ததற்கு அவரது பிறப்பும் ஜாதியும் ஒரு காரணம்.
இன்றும் பாரதியை புனித சட்டத்திற்குள் வைக்க வேண்டிய அவசியம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏன் வந்தது ? மார்க்சின் சிந்தாந்தத்தை விமர்சனம் செய்வது ஏற்றுக் கொள்வதே காரண-காரிய அடிப்படையிலான கம்யூனிச மரபு. அறிவார்ந்த தன்மையாக பார்க்க வேண்டிய கொள்கைவாதிகள், பாரதிக்கெல்லாம் ஏன் பொங்குகிறார்கள் என புரியவில்லை.

சம காலத்தில் மகாத்மா காந்தியை எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, புரட்சியாளர் அம்பேத்கர் அவரது சனாதன - முதலாளித்துவ மனநிலையை கேள்வி கேட்டு காந்திக்கு நெருக்கடி தந்தவர். ஆக பார்ப்பனியத்தின் வடிவங்கள் குறித்த எச்சரிக்கையோடு இருப்பதும் அதை மக்களுக்கு புரிய வைப்பதற்கும் அறிவியல் பூர்வமாக யோசிக்க வேண்டிய கம்யூனிச தோழமைகள் கொதித்தெழுந்து மகாகவி பாரதிக்கு போஸ்ட் போடுகிறார்களே ஏன் ?

பாரதி அவரது காலத்தில் இருந்த சமூக சீர்கேடுகள் குறித்த கவிதைகள் எழுதி இருந்தாலும் அவர் கோட்பாட்டு ரீதியாக ஆரிய- பார்ப்பன சித்தாந்தத்தின் வழி நின்றவர்.
அவரது கவிதைகளே அதற்கு சாட்சி. சனாதனம் குறித்த தெளிவை பெற்றவர்களுக்கு பாரதியின் ஆரிய சனாதன  மனநிலை ஈர்ப்பை தராது.

விவேகானந்தர், பாரதி, காந்தி இவர்களையெல்லாம் சங்கிகள் புரட்சியாளர்களாக எல்லோருக்குமானவர்களாக இந்துமதத்தின் சீர்திருத்தவாதிகளாக காட்டிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள்.
இது நாள் வரை அப்படியான பிம்பத்தை அவர்களுக்கு தந்து இந்துமதத்தை பார்ப்பனியம் காப்பற்றி வருகிறது.

விவேகானந்தர், பாரதி, காந்தி ஆகியோர் மீது பார்ப்பனியம் கட்டமைத்திருக்கிற பிம்பத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம், கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏன் எழுகிறது ?
ஒரு வேளை பாரதி, "புரட்சி கவி" என்பதால் கம்யூனிசம் பாரதியை கம்யூனிசவாதியாக பார்க்கிறதோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக