வியாழன், 29 டிசம்பர், 2022

ஈபிஎஸ் தான் பொதுச்செயலாளர்; அங்கீகரித்த மத்திய அரசு; கொண்டாட்டத்தில் பழனிசாமி 

நக்கீரன் : ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதார செலவுகளைக் குறைக்கவும் தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்கவும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை நடைமுறைக்குக் கொண்டு வர ஆலோசித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகளைக் கேட்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை ஆணையகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்ட நிலையில்,
இது குறித்து கருத்துகளைத் தெரிவிக்க அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த வகையில் அதிமுகவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஜி20 மாநாட்டிற்காக பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி20 மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற விவகாரத்துறைக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என இந்திய சட்ட ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஓபிஎஸ் எவ்வாறு எதிர்வினை ஆற்றுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக