வெள்ளி, 16 டிசம்பர், 2022

இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகிறது! உண்மையை மறைக்கும் ஒன்றிய அரசு! ராகுல் காந்தி எச்சரிக்கை

 tamil.oneindia.com - Vigneshkumar  :  ஜெய்ப்பூர்: எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சீனா சத்தமின்றி போருக்குத் தயாராகி வருவதாக ராகுல் காந்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் சுமுகமான உறவு இல்லை. இந்தியப் பகுதிகளில் சீனா ராணுவம் அத்துமீறி நுழைந்து, அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் காரணமாக எல்லையில் இரு தரப்பிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. அதிலும் 2020இல் எல்லையில் ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பிறகு இந்தியா- சீனாவுக்கும் இடையேயான உறவு மேலும் மோசமானது.



சீனா மோதல்
அதன் பிறகு இரு தரப்பிற்கும் இடையே ராணுவ ரீதியாகப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிலைமை சற்று அமைதியானது. எல்லையில் சில இடங்களில் இருந்து இரு தரப்பும் தங்கள் ராணுவத்தை வாபஸ் பெற தொடங்கினர். இந்தச் சூழலில் தான், யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த கடந்த டிச.9ஆம் தேதி அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியது. சுமார் 500க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

ராகுல் காந்தி
இருப்பினும், இந்திய ராணுவம் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து விரட்டியுள்ளது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக இந்திய ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை. யாருக்கும் மோசமான காயம் கூட ஏற்படவில்லை. இது தொடர்பாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார். இந்தச் சூழலில் சீனாவின் அச்சுறுத்தலை மத்திய அரசு குறைத்து மதிப்பிடுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சீனா அமைதியாகப் போருக்குத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

போருக்குத் தயாராகும் சீனா
ராகுல் காந்தி தனது ஒற்றுமை யாத்திரையில் இப்போது ராஜஸ்தானில் உள்ளார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "எல்லையில் சீனா போருக்குத் தயாராகி வருகிறது. இது வெறும் ஊடுருவல் முயற்சி மட்டுமில்லை. நாம் அத்துடன் இதைச் சுருக்கி பார்க்க முடியாது. அவர்களின் ஆயுதங்களைப் பாருங்கள். அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள். ஆனால், நமது அரசு இதை ஏற்க மறுக்கிறது. இந்திய அரசு ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பதிலளிக்கிறதே தவிரச் சீனாவின் வியூகத்திற்குப் பதிலடி கொடுப்பதில்லை.

இந்தியா தூங்குகிறது
சீனா நமது நிலத்தைக் கைப்பற்றியுள்ளது. அவர்கள் நமது ராணுவ வீரர்களை அடித்து விரட்டுகிறார்கள். சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. ஆனாலும், கூட மத்திய அரசு அதை புறக்கணித்து மறைக்கிறது. லடாக் மற்றும் அருணாச்சலத்தில் பெரிய தாக்குதலுக்குச் சீனா தயாராகி வருகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்திய அரசு தூங்குகிறது. என்ன நடக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெளியுவர அமைச்சர் தொடர்ந்து அறிக்கைகளை வழங்குகிறார்.. ஆனால் என்ன நடக்கிறது என்பதை அவர் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் வீழ்த்தும்
காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி பாஜகவில் இணைவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "பாஜகவைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளச் சிலருக்குத் தைரியம் இல்லை. அவர்கள் கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், தாராளமாக வெளியேறலாம். அவர்கள் எங்களுக்குத் தேவையில்லை. காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்து பாசிசத்தை எதிர்ப்பவர்கள் மட்டுமே எங்களுக்குத் தேவை. இப்போது சொல்கிறேன். நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்.. பாஜகவை நிச்சயம் காங்கிரஸ் கட்சி வீழ்த்தும்" என்று அவர் தெரிவித்தார்.

சீனா போர்
அருணாச்சல பிரதேசத்தில் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல காலமாகப் பிரச்சினை நிலவி வருகிறது. சீனாவும் இந்தியாவும் 1962ஆம் ஆண்டு முழு வீச்சில் போரில் சண்டையிட்டது. அதன் பின்னரும் கூட அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்தாலும் அதைக் கையைவிட்டுப் போகவில்லை. இந்தியாவுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை முழுமையாக உரிமை கோரும் சீனா, அது தனது திபெத்தின் ஒரு பகுதியாக என்று கூறி வருகிறது.

English summary
Rahul Gandhi says China is silently preparing for war: Congress Rahul Gandhi explains about Indian China war.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக