வியாழன், 8 டிசம்பர், 2022

நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி காலமானார்.. பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி

tamil.filmibeat.com  - Mari S  :  பட்டுக்கோட்டை: விவேக் மற்றும் வடிவேலு காமெடிகளில் முக்கிய துணை நடிகராக நடித்து வந்த நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 67.
நடிகரும் இயக்குநருமான விசு இவரை அறிமுகம் செய்து வைத்தார். பூந்தோட்டம் எனும் படத்தில் முதல் முதலாக நடித்த சிவநாராயணமூர்த்தி 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
காமெடி போலீஸ் கதாபாத்திரங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் இவர் தான்.
பட்டுக்கோட்டையை சேர்ந்த தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் T. சிவ நாராயணமுர்த்தி (இன்று) 07.12.2022 இரவு 8.30 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவருக்கு வயது 67. சிவநாராயணமூர்த்தியின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அறிமுகப்படுத்திய விசு
தமிழ் சினிமாவின் மறைந்த பிரபல இயக்குநரும் நடிகருமான விசு தான் கோலிவுட்டில் சிவ நாராயண மூர்த்தியை அறிமுகம் செய்து வைத்தார். களஞ்சியம் இயக்கத்தில் வெளியான பூந்தோட்டம் திரைப்படம் தான் இவரது முதல் படம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

காமெடி நடிகர்
தமிழ்நாடு போலீஸ் தொப்பையை பார்த்தாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? என விவேக் இவரை வைத்து பயங்கரமாக கிண்டல் செய்த காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. விவேக் மற்றும் வடிவேலு படங்களில் துணை காமெடி நடிகராகவும், ஊர் பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரங்கள் என தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு
இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி. இவரது இறுதி சடங்கு சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் 12 மணி மேல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரது மறைவை அறிந்த சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக