tamil.oneindia.com - Vignesh Selvaraj : புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், எந்த தயவு தாட்சண்யமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்.
இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் வாட்டர் டேங்க்கில் மலம் கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையின்போது அந்த கிராமத்தில் கோவிலில் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படாதது அதிர்ச்சியைக் கிளப்பியது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியலின மக்களை கோவிலில் வழிபாடு செய்ய அழைத்துச் சென்றார். தீண்டாமை கொடுமை தொடர்பாக உயர் சாதியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இறையூர் தீண்டாமை கொடுமை
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் அந்தப் பகுதிக்கு சென்று விசாரணை செய்தபோது அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பட்டியலின மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் இருந்ததும், அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது.
கலெக்டர் + எஸ்.பி
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் பட்டியலின மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்யச் செய்தனர். மேலும் இரட்டைக் குவளை முறையை கடைபிடித்த டீக்கடை உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் செய்ய பதிவு செய்யப்பட்டு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று கோவிலில் சாமி ஆடி, பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசிய பெண்மணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்.
அனைத்து சமுதாய மக்கள்
இந்த நிலையில் நேற்று இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் அய்யனார் கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் வழிபடுவதற்கும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது.
அமைச்சர் மெய்யநாதன்
மேலும் இன்று அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து வழிபாடு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
20 நாட்களுக்குள் புதிய டேங்க்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், "நடக்கக்கூடாத சம்பவம் நடந்து விட்டது. மனிதக் கழிவுகளை தொட்டியில் கலந்தது என்பது கடுமையான கண்டனத்திற்குரியது. நடைபெறக்கூடாத, மனிதாபிமானமற்ற, கண்டிக்கத்தக்க செயலை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டியலின மக்கள் பயன்படுத்துவதற்காக புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணி நாளை தொடங்கி 20 நாட்களுக்குள் பணிகள் முடிவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்" எனத் தெரிவித்தார்.
தயவு தாட்சண்யம் இல்லாமல்
மேலும் பேசிய அமைச்சர் மெய்யநாதன், இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. யாருக்கும் எந்த தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வரின் விருப்பம் என்றார்.
English summary
Environment Minister Meyyanathan has categorically stated that the cases registered in Pudukottai district Vengaivayal village will not be withdrawn for any reason. Also, Minister Meiyanathan has assured that action will be taken without any favouritism.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக