சனி, 24 டிசம்பர், 2022

ராகுல் நடைபயணத்திற்கு கமல்ஹாசன் அழைப்பு! உயிரே உறவே தமிழே வணக்கம்! நான் வர்றேன்.. நீங்களும் வாங்க!

கமல்ஹாசன்

tamil.oneindia.com - Rajkumar R  :   சென்னை : தலைநகர் டெல்லியில் நாளை நடைபெறும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்று அக்கட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.


கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து நடை பயணத்தை தொடங்கிய அவர், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

பாரத் ஜோடோ யாத்ரா
தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்துள்ள ராகுலின் நடைபயணம் தற்போது 100 நாட்களைக் கடந்துள்ளது. இந்த பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள், காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்ட நிலையில் பல பிரபலங்களும் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து பிரபலமானோர் ராகுலின் பேரணியில் கலந்து கொள்ளாத நிலையில், முதன்முறையாக காங்கிரஸ் கூட்டணியல்லாத கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன் ராகுலின் நடைபயணத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

கமல்ஹாசன்
ஏற்கனவே தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நடிகர் கமலஹாசனின் கட்சி இணையலாம் என யூகங்கள் வெளியாகி வரும் நிலையில் கமல்ஹாசனின் இந்த திடீர் முடிவு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்வதை அந்த கட்சியும் உறுதி செய்த நிலையில் கமலஹாசன் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வர தயாராக இருப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில் இது தேசத்திற்கான ஒரு நடைபயணம். இது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல் வீடியோ
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள அக்கட்சி தலைவர் கமல்ஹாசன்," உயிரே உறவே தமிழே வணக்கம்.. அதில் ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல் என்னை ஃபேலோ சிட்டிசன் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒரு இந்தியனாக இழந்து கொண்டிருக்கும் மாண்பை மீட்டெடுக்கும் முயற்சியாக இதனை நான் கருதுகிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இம்முன்னெடுப்பில் தலைநகரில் வாழும் தமிழர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பது என் ஆசை.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டது
இது தேசத்திற்கான ஒரு நடைபயணம். இது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. டிசம்பர் 24, 2022 நான் உங்களிடத்தில் வருகிறேன். உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். வாருங்கள் புதிய இந்தியா படைப்போம், நாளை நமதே..ஜெய்ஹிந்த்" என பேசியுள்ளார். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் தேச ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள கமல்ஹாசன் இன்று சென்னையிலிருந்து டெல்லி சென்றுள்ளதாகவும், நாளை திட்டமிட்டபடி அவர் பேரணியில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

English summary
A video has been released on the MNM Twitter page, while actor and leader of the People's Justice Center Kamal Haasan is going to participate in the Bharat Jodo Yatra of former Congress president Rahul Gandhi in the capital Delhi tomorrow.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக