சனி, 24 டிசம்பர், 2022

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடிக்கும் கமல்!.. ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்றார்!

maalaimalar :   சென்னை: பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை ஒவ்வொரு கட்சியும் வகுக்க தொடங்கி விட்டன. தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியிலும், பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றே இரு கட்சி தலைவர்களும் கூறி வருகிறார்கள்.
பா.ஜனதாவை எதிர்க்கும் எல்லா கட்சிகளுமே இந்த கூட்டணியில் இடம் பெறவே விரும்புகின்றன. கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சி இந்த தேர்தலில் கூட்டணி என்ற முடிவுக்கு வந்து விட்டது. சமீபத்தில் அந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் அண்ணா நகரில் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த கமலிடம் கூட்டணி பற்றி கேட்டபோது, கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்த திசையில் பயணிக்கிறோம் என்பதை என் பயணத்தை தெரிந்து கொண்டாலே உங்களுக்கு புரிய வரும் என்று கூறினார்.


இந்த நிலையில் தனது கட்சியை சேர்ந்த 250 பேருடன் இன்று டெல்லியில் ராகுல் நடைபயணத்தில் கலந்து கொண்டார்.

ராகுல் அழைப்பின் பேரில் கமல் கலந்து கொண்டாலும் இது அரசியல் கூட்டணிக்கான அச்சாரமாகவே கருதப்படுகிறது.

ஏனெனில் பா.ஜனதாவுக்கு எதிராக வலிமையான மெகா கூட்டணி அமைக்கவே தி.மு.க. விரும்புகிறது. அந்த வகையில் 2 சதவீதம் வாக்கு வங்கியை கொண்டுள்ள கமல் கட்சியும் தங்கள் பக்கம் வர வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது. அதன் அடிப்படையில் தான் இந்த அழைப்பு பின்னணியும் இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ஜனதாவை விட காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வருவதையே கமல் விரும்புகிறார். எனவே காங்கிரஸ் அணியில் இடம் பிடிக்கவே இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

கூட்டணி உறுதியாகி விட்டதாகவும் தொகுதி பங்கீடுதான் யோசிக்கப்படுவதாகவும் கட்சியினர் பேசிக் கொள்கிறார்கள்.

குறைந்தது 2 தொகுதிகளும் ஒரு மேல்சபை இடமும் வேண்டும் என்று கமல் தரப்பு வலியுறுத்துவதாகவும், ஆனால் ஒரு தொகுதி, ஒரு மேல்சபை பதவி தரலாம் என்று கூறி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து கமல்ஹாசன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

இருப்பினும் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தென் சென்னை அல்லது கோவையில் போட்டியிடவே அவர் விரும்புகிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக