சனி, 10 டிசம்பர், 2022

அண்ணாமலையார் கோவிலில் ஒலித்த இந்திப் பாடல்; பக்தர்கள் அதிர்ச்சி

nakkheeran.in  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவில் சுமார் 35 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர். மகாதீபம் அன்று மட்டும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
மகாதீபம் அன்று கோவில் வளாகத்தில் மூன்றாம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி, சண்டிகேஸ்வரர் வரிசையாக ஆடலுடன் தூக்கி வந்து காட்சி மண்டபத்தில் வைப்பர். இறுதியாகவே அர்த்தநாரீஸ்வரர் வெளியே தூக்கி வருவார்.
 ஆண்டுக்கு ஒருமுறை மகா தீபத்தன்று தனது சன்னதியில் இருந்து வெளியே வந்து கொடிமரம் அருகிலிருந்து அங்கே குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சியளிப்பார் அர்த்தநாரீஸ்வரர். அப்போது சரியாக 6 மணிக்கு 2668 உயரமுள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும், அதுவே திருவிழாவின் உச்சம்.


சன்னதியில் இருந்து அபிஷேகம், அலங்காரம் முடிந்து சரியாக 6 மணிக்கு வெளியே வரும் அர்த்தநாரீஸ்வரரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானவர்கள் காத்திருப்பார்கள்.

அந்த 3 மணி நேரத்தில் மூன்றாம் பிரகாரத்தில் குழுமியுள்ள பக்தர்களிடம் பக்தி எழுச்சியை உருவாக்க பக்தி பாடல்கள் பாடப்படும். கடந்த காலத்தில் பக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸ், வீரமணிதாசன் போன்றோர் சிவன் பாடல்கள், தேவாரம், திருவாசகம் வரிகள் அமைந்த சிவபக்தி பாடல்கள் பாடுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக பாடகி நித்திய ஸ்ரீமகாதேவன், டிரம்ஸ் சிவமணி, இந்தாண்டு மங்கையர்க்கரசி, பாடகர் எஸ்.பி.பி.சரண் குழுவினர் பாடல்கள் பாடினர், இவர்களும் பக்தி பாடல்களை பாடினர். ஆனால் அவை சினிமாவில் வரும் பக்தி பாடல்களாக இருந்தன. அதைவிட அதிக அதிர்ச்சியை உருவாக்கியது தமிழ்மொழி அல்லாத பிறமொழி பாடல்கள். தெலுங்கு மொழியில் பாடப்படும் சங்கராபரணம் பாடல் உட்பட இரண்டு தெலுங்கு பக்தி பாடல்கள், இந்தி கலந்த ஹரஹர மகாதேவா என்கிற பாடல் பாடப்பட்டன. பக்தி பரவசத்துடன் இருந்த பலருக்கும், அதீத இசை போன்றவற்றால் மொழி புரியவில்லை. பாடல்களை நுணுக்கமாகக் கேட்ட சிலருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

மகாதீபம் முடிந்த மறுநாள் தெப்பல் விழா நடைபெற்றது. ஐய்யங்குளத்தில் நடைபெற்ற முதல்நாள் தெப்பல் திருவிழாவில் வட இந்தியாவில் பிரபலமான பாடகி அனுராதா பட்வால் பாடிய சிவன் குறித்த இந்திப் பாடல் ஒன்று ஸ்பீக்கரில் ஒலித்தது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சமஸ்கிருத அர்ச்சனைகளைத் தவிர்க்கவேண்டும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்கிற அரசின் உத்தரவே இருக்கிறது. பெரிய கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் பிரபலமான அண்ணாமலையார் கோவிலில் வழக்கத்துக்கு மாறாகப் பிறமொழி பாடல் பாடப்பட்டதும், தெப்பல் திருவிழாவில் இந்திப் பாடல் ஒலிபரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரித்தபோது, தீபத்திருவிழா அண்ணாமலையார் கோவில் நடத்தினாலும் கோவிலுக்கு திருவிழா தவிர்த்து மற்ற நாட்களில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகா பக்தர்களின் ஆதிக்கத்தில் மெல்ல மெல்ல அண்ணாமலையார் கோவில் செல்கிறது.
 தீபம் அன்று கோவிலுக்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த, உள்ளூரைச் சேர்ந்த பக்தர்களைவிட ஆந்திரா, கர்நாடகா பக்தர்கள் அதிகளவில் இருந்தனர். அதாவது உள்ளூர்க்காரர்களுக்கு பாஸ் கிடைக்கவில்லை, வெளிமாநிலத்தவர்களுக்கு தாராளமாக பாஸ் கிடைக்கும் அளவுக்கு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் உள்ளது.

கோவிலில் அதிகாரம் செய்யும் புரோக்கர்களாக சிலர் உள்ளார்கள். அவர்களுடன் கோவிலில் நீண்டகாலம் பணியாற்றும் அலுவலர்கள் கைகோர்த்துக் கொண்டுள்ளனர். பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி பிறமொழி பாடல்களைப் பாட வைத்துள்ளார்கள். தெப்பல் நடந்த ஐய்யங்குளத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒருகாலத்தில் சிவாச்சாரியர்கள், ஐயர்கள் குடியிருந்தனர். இப்போது மார்வாடிகள், குஜராத்திகள் குடியிருக்கிறார்கள். அதனால் அவர்கள் விரும்பிய இந்திப் பாடல்களை போட்டுள்ளார்கள் என்றார்கள்.

தமிழ்நாட்டு கோவில்களில்தான் இந்த அநியாயம் நடக்கும். மற்ற மாநிலங்களில் பிரபலமான கோவில்கள் உள்ளன. தமிழர்கள் அதிகளவில் அங்கு செல்கிறார்கள். ஆனால் அங்குள்ள கோவில்களில் தமிழர்களைக் கேவலமாகவே நடத்துகிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்கிறோம். ஆனால் பக்தி சுற்றுலா வருபவர்களிடமும் நமது தமிழ் பாரம்பரியத்தை இழக்கிறோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக