வியாழன், 1 டிசம்பர், 2022

எஸ்.பி. வேலுமணியின் சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

bbc.com  :  எஸ்.பி. வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் - BBC News தமிழ்
தன் மீதான சொத்து் குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அவர் மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவர் சென்னை மாநகராட்சியிலும் கோவை மாநகராட்சியிலும் உள்ள பணிகளுக்கு முறைகேடாக டெண்டர்களை வெளியிட்டதாகவும் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ. 58 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் அறப்போர் இயக்கமும் தி.மு.கவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதியும் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்குகளைப் பதிவுசெய்ய வேண்டுமென வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து எஸ்.பி. வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அரசு சார்பில் அதன் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரமும் காவல்துறை தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவும் ஆஜராயினர்.

புகார்தாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சுரேஷ் ஆகியோர் ஆஜராயினர்.

எஸ்.பி.வேலுமணி தரப்பில் தில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தாவே, வழக்கறிஞர் ஜெ. கருப்பையா ஆகியோர் ஆஜராயினர்.

எஸ்.பி. வேலுமணி தரப்பு வாதிடும்போது, தன் மீதான முறைகேடுகளை விசாரித்த லஞ்ச ஒழிப்புத் துறை, நடவடிக்கை தேவையில்லை என 2020ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டதாக வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சொத்துக் குவிப்பு வழக்கை ரத்துசெய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால், டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விட்டதில் முறைகேடுகள் செய்ததாகவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கு முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.பி.வேலுமணி தரப்பில் தனக்கெதிரான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பி அறிக்கை அளித்து, ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்ததாகவும் தமிழக அரசாங்கமும் 2020ஆம் ஆண்டில் அந்த நடவடிக்கையைக் கைவிடுவதாக முடிவெடுத்ததாகவும் வாதிடப்பட்டது.

மேலும், ஒளிவு மறைவற்ற முறையிலேயே டெண்டர் கோரியதாகவும் அதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லையென்றும் வாதிடப்பட்டது.

புகாரளித்த அறப்போர் இயக்கம் தரப்பில், பொத்தாம் பொதுவாக இல்லாமல் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளைக் கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான புகார்கள் இரண்டும் அரசியல் உள்நோக்கமும் தவறான நம்பிக்கை கொண்டவையும் என்பதால் அவற்றை ரத்து செய்யக் கோரி வேலுமணி இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

ஒப்பந்தங்களும் டெண்டர்களும் வழங்கப்படுவதற்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று அவருடைய வழக்கறிஞர் வாதிட்டார்.

ஓர் அமைச்சராக, ஒப்பந்தங்கள் முறையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வது மட்டுமே வேலுமணியின் பொறுப்பு என்று மேலும் வாதிடப்பட்டது. திமுகவினரின் விருப்பத்தின் பேரிலேயே தன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வேலுமணி கூறியிருந்தார். இருப்பினும், தவறான குற்றச்சாட்டுகளை மறுத்த மாநில அரசு, டிவிஏசி சட்டபூர்வ விசாரணைகளை நடத்தியதாகவும் வேலுமணிக்கு எதிரான பதிவுகளில் போதுமான தகவல்கள் இருப்பதாகவும் பதிலை சமர்ப்பித்தது. ஏலத்தொகை மிகவும் குறைவாக இருந்தபோதிலும், வேலுமணி தனது உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படுவதை உறுதி செய்ய மற்ற குடிமைத்துறை அதிகாரிகளுடன் சதி செய்ததாக அவர்கள் தரப்பில் வாதிட்டதாக பார் அண்ட் பெஞ்ச் குறிப்பிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம், சென்னை, கோவையில் உள்ள குடிமை அமைப்புகள் மூலம் டெண்டர்கள் வழங்கியதில் ஊழல் நடந்ததாகவும் அதிமுக ஆட்சியின்போது வேலுமணியும் அதில் ஈடுபட்டதாகவும் சுட்டிக்காட்டி பொதுநல மனு தாக்கல் செய்தது.

இந்தப் புகார்களை விசாரிக்கவும் ஏதேனும் அடையாளம் காணக்கூடிய குற்றம் நடந்ததா என்பதைக் கண்டறியவும் காவல் கண்காணிப்பாளர் ஆர்.பொன்னியை உயர்நீதிமன்றம் நியமித்தது. அவர் வேலுமணி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று தெரிவித்தார். மேலும், 2020 ஜனவரியில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கம் இது குறித்த ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்டது.

இருப்பினும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, டிவிஏசி வேலுமணிக்கு எதிராக இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்தது. அந்த எஃப்ஐஆர்கள் இரண்டும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி ரத்து செய்யக் கோரி வேலுமணி இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்தும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக