வெள்ளி, 23 டிசம்பர், 2022

புதுச்சேரியில் சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை- 7 பேருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை

 மாலை மலர்  :   புதுச்சேரி: வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் வாத்துப்பண்ணை நடத்திவருகிறார்.
மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் வாத்து பண்ணை பணிகளை கவனித்து வந்தனர். வாத்துகளை மேய்ப்பதற்காக புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளில் இருந்து சிறுமிகளை வேலைக்கு வரவழைப்பது வழக்கம்.
இவ்வாறு வாத்து மேய்க்கும் சிறுமிகளை கொத்தடிமை போன்று அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகள் செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக குழந்தைகள் நல காப்பகத்தில் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் வாத்துப் பண்ணைக்கு சென்று, சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை ஆய்வு செய்து, அங்கிருந்த 5 சிறுமிகளை மீட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கு கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக 2020ஆம் ஆண்டு புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார், உறவினர்கள் பசுபதி, அய்யனார் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கன்னியப்பன் மனைவி சுபாவுக்கு ஆயுள் தண்டனையும், காத்தவராயன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடும், மற்ற 4 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக