புதன், 7 டிசம்பர், 2022

4644 புதிய அடுக்குமாடி வீடுகள்: முதலமைச்சர் திறந்து வைத்தார் . ஈரோடு, கோவை, மதுரை மாவட்டங்களில்

மாலை மலர்  :  சென்னை:  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் 8 மாவட்டங்களில் 15 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11,300 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், 350 பயனாளிகளுக்கு குடியிருப்பு மற்றும் மனைகளுக்கான கிரயப் பத்திரங்களையும் வழங்கிடும் அடையாளமாக 8 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.


இதில் ஈரோடு மாவட்டம், கண்ணன்கரடு திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.41.02 கோடி செலவில் 492 அடுக்குமாடி குடியிருப்புகள், நேதாஜி நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.17.70 கோடி செலவில் 204 அடுக்குமாடி குடியிருப்புகள், நஞ்சை ஊத்துக்குளி திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.8.25 கோடி செலவில் 96 அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம், ஐ.யு.டி.பி திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் ரூ.46.44 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட்டது.

சூலூர் பகுதி–3 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.41.88 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னீர் மடை கிழக்கு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.5.44 கோடி செலவில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கும் இது மட்டுமின்றி திருப்பூர், மதுரை, சேலம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதிய அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டிருந்தது. மொத்தம் 4644 குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 105 பகுதிகளில் வசிக்கும் 11,300 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகள் வழங்கப்படுகிறது.

இதற்கு அடையாளமாக 2 பயனாளிகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 150 கிரயப் பத்திரங்களும், மனைகளுக்கான 200 கிரயப்பத்திரங்களும், என 350 பயனாளிகளுக்கு கிரயப் பத்திரங்களை வழங்கிடும் அடையாளமாக 4 பயனாளிகளுக்கும் ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக