சனி, 17 டிசம்பர், 2022

முரசொலி தலையங்கம் : "35 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான உரிமை": நிறைவேற்றுவாரா ரணில்?

"35 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான உரிமை": நிறைவேற்றுவாரா ரணில்: முரசொலி!
"35 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான உரிமை": நிறைவேற்றுவாரா ரணில்: முரசொலி!

கலைஞர் செய்திகள் - லெனின் : இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் படி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படும், அந்த மாகாணம் உரிமை பெற்ற மாகாணமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.
முரசொலி தலையங்கம் (17-12-2022)  இலங்கைத் தமிழர்க்கு அதிகாரம்!
“எதிர்வரும் சுதந்திர தின விழாவிற்குள் தமிழர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்று இலங்கை ஜனாதிபதி ரணில் கேட்டுக் கொண்டுள்ளார்.


பிப்ரவரி 4 - இலங்கையின் சுதந்திர தினம் ஆகும். அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 என்பது இலங்கைக்கு 75 ஆவது சுதந்திர தின ஆண்டு ஆகும். அந்த நாளுக்குள் இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பேன் என்பது ரணில் அளித்துள்ள வாக்குறுதி ஆகும். ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 13 ஆம் தேதி இலங்கை சர்வகட்சி மாநாடு நடந்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தின் வழியாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பொது இணக்கத்தை எட்டும் நோக்கில் ஜனாதிபதி இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இம்மாநாட்டில் தமிழர் கட்சிகள் மட்டுமல்ல, சிங்களக் கட்சிகளும் வந்துள்ளன. இரு தரப்பும் இணைந்து இதனைச் செயல்படுத்த வேண்டும் என்று ரணில் நினைக்கிறார். தமிழர்க்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13–ஏ சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழர் கட்சிகள் வலியுறுத்தி இருக்கின்றன.

“இந்நாட்டில் நிலவும் பிரச்சினையைத் தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு இனப்பிரச்சினை என்பதா அல்லது வேறு ஏதாவது பெயரைச் சொல்வதா என்பது முக்கியமல்ல. எமக்குத் தேவைப்படுவது, இப்பிரச்சினை களுக்கான தீர்வேயாகும்” என்று ஜனாதிபதி ரணில் சொல்லி இருக்கிறார்.

காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும் அவர்கள் தொடர்பில் செய்யப்படும் விசாரணை. பயங்கரவாதத் தடைச் சட்டம், அதேபோன்று நிலம் தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. இதனை இக்கூட்டம் ஆராய்ந்துள்ளது. இரண்டாவதாக, அதிகாரப் பகிர்வு தொடர்பான சட்டப் பணிகளைச் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் பேசும்போது, “தமிழ் மக்கள் தரப்பில் இருந்து இப்பிரச்சினையைப் பார்த்தால், அதில் எமக்கு மூன்று கட்டங்கள் உள்ளன. அவை நிலம், காணாமல் போனவர்கள் மற்றும் அம்மாகாணங்களில் அதிகளவில் படையினர் குவிப்பு. வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களாகிய எமக்கு 3,000 வருடங்களுக்கும் மேலான வரலாறு உண்டு என்பதை இறுதியாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். எங்களுக்கு எங்களுக்கென்றே கூறும்படியான காணி இருக்கிறது போன்றே எமக்கென ஒரு மொழி மற்றும் கலாச்சாரமும் உள்ளது. அதற்கான உரிமை இந்த நாட்டில் எமக்கு வழங்கப்பட வேண்டும். எமக்கு மரியாதை, சமத்துவம் மற்றும் எதிர்காலத்தில் ஒரே நாடாக – ஒன்றாகச் செல்லக்கூடிய வகையிலான அரசியலமைப்பு ஒன்று இருக்க வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பேசும் போது, ‘‘75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக, குறைந்தபட்சம் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். அதன் பிறகு, அனைத்துக் கட்சி மாநாடு மற்றும் தேவைப்பட்டால், சிவில் அமைப்புகளும் பங்கேற்று அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்குச் செல்லலாம்” என்று சொல்லி இருக்கிறார்.

“மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். மாகாண சபைகளின் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவது அவசியம் என்பதே எமது நிலைப்பாடாகும். முதலில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நல்லிணக்கத்தை ஆரம்பிப்போம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சொல்லி இருக்கிறார். இப்படி தமிழர் பிரச்சினையை மீண்டும் பேசி -தீர்வு காணும் கட்டத்துக்கு இலங்கை வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

இலங்கை விவகாரங்கள் குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நாடாளுமன்றக் கட்சிகள் கூட்டம் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடந்தது. அப்போது தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் – -கழகப் பொருளாளருமான டி.ஆர்.பாலு, கழக நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

“இலங்கைக்கு மனிதநேய அடிப்படையில் உதவி செய்திடும் அதே வேளையில், அங்கு நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டிட, தமிழர்கள் மிகுதியாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகத் தன்னாட்சியையும் அதிகாரப் பகிர்வையும் வழங்கும் வகையில் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த உண்மையான அக்கறையுடன் இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும்” என்பதை வலியுறுத்தி இருந்தார்.

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் படி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு -– கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படும், அந்த மாகாணம் உரிமை பெற்ற மாகாணமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் 1987 ஆம் ஆண்டு போட்ட ஒப்பந்தம் 35 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது. இந்த சட்டம் செல்லாது என்று இலங்கை உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. எனவே, புதிய ஒரு சட்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியாக வேண்டும். அதுதான் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் நலன் சார்ந்ததாக அமைய முடியும்.

தமிழர் கட்சிகள், சிங்கள கட்சிகள், இலங்கை ஜனாதிபதி ரணில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இது நடக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக